மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரை பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க பணிப்புரை

Report Print Kumar in சமூகம்
123Shares

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும், மேய்ச்சல் தரையினை பாவிப்பதை தடை செய்ய வேண்டாம் எனவும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய அபகரிப்பு தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த மாதம் 18ஆம் திகதி பண்ணையாளர்கள் சார்பில் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை அபகரிப்பு தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதிகளும் மேய்ச்சல் தரையில் அத்துமீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்ததாகவும் சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேய்ச்சல் தரையில் பண்ணையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து குறிப்பிட்ட அதிகாரிகள் மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரையை பாவிப்பதை தடை செய்யக் கூடாது.

அதனை நடைமுறைப்படுத்துவதாக அரச சட்டத்தரணி ஏற்றுக்கொண்டதுடன் அது தொடர்பில் உரிய அதிகாரிகளை அறிவுறுத்துவதாக நீதிமன்றுக்கு வாக்குறுதியளித்தாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.

தற்போது மேய்ச்சல் தரை அபகரிப்பட்டதாக தெரிவிக்கப்படும் பகுதியை தவிர அப்பகுதியில் எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்க கூடாது என்பதற்கும் அரச சட்டத்தரணி இணக்கம் தெரிவித்துள்ளார்.

வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரையில் தற்போது பிடிக்கப்பட்டுள்ள காணியை அவ்வாறே பேணுமாறும் வேறு எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்க கூடாது என பணிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரத்தினவேல் கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.