கிளிநொச்சி கந்தன்குளத்தின் அணைக்கட்டு வெட்டப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுள்ளது

Report Print Thamilselvan in சமூகம்
133Shares

கிளிநொச்சி கந்தன்குளத்தின் அணைக்கட்டின் ஊடாக பெருமளவில் நீர் வெளியேறிவந்த நிலையில் அதனைத் தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் முடியாத நிலையில் இன்று (22) பிற்பகல் குளத்தின் வான் பகுதிக்கு அருகில் அணைக்கட்டு வெட்டப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

அணைக்கட்டின் துருசு பகுதியின் கீழ்ப் பகுதியில் பெரிய துவாரம் ஊடாக நீர் வெளியேறிய நிலையில் அதனைத் தடுக்க இராணுவம், பொது மக்கள் மற்றும் திணைக்களங்கள் என்பன முயற்சிகள் மேற்கொண்டிருந்த போதும் நீர் வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியாத நிலையில் தொடர்ந்தும் நீர் வெளியேறி கொண்டிருந்தது.

குறித்த நீர் வெளியேற்றத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் எந்நேரமும் அணைக்கட்டு உடைப்பெடுக்கலாம் என்ற அச்சத்தில் அதனைத் தடுக்கும் வகையில் அணைக்கட்டின் வான் பகுதிக்கு அருகில் வெட்டப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் அணைக்கட்டு உடைக்கும் அபாயத்தைத் தவிர்க்கும் வகையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி படைகளின் கட்டளை தளபதி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளனர்.

நீர் வழிந்தோடுவதால் தாழ் நிலப்பகுதி மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தமது பாதிப்பு தொடர்பில் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.