நாட்டில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கொவிட் தொற்று

Report Print Kamel Kamel in சமூகம்
63Shares

நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டொக்டர் ஹரித அலுத்கே இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் இரண்டாம் அலையில் இதுவரையில் சுமார் நூறு மருத்துவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தற்பொழுது சுமார் நாற்பது மருத்துவர்கள் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவர்களுடன் தொடர்பு பேணிய பலர் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மருத்துவர்கள், தாதியர்கள் போன்றோருக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து அவர்களை பாதுகாப்பதற்கு சுகாதார அமைச்சு கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதிலும் அபாய வலயங்கள் உருவாகியுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட் தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை என்பன சடுதியான அதிகரிப்பினை தொடர்ச்சியாக பதிவு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது ஓர் ஆபத்தான நிலைமை எனவும், இந்தவிதமாக அதிகரித்த சில நாடுகளின் மிகப் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் இவ்வாறு அதிக வேகத்தில் நோய்த் தொற்றாளிகளின் எண்ணிக்கை உயர்வடைந்தால் அது ஓர் பாரதூரமான நிலைமையாகவே கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தொற்று நோயியல் பிரிவிற்கு அமைய இன்னும் சமூகத் தொற்று ஏற்படவில்லை என்ற போதிலும் யதார்த்தமாக நோக்கினால் சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டியுள்ளது என டொக்டர் ஹரித் அலுத்கே தெரிவித்துள்ளார்.