தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய 2,710 பேர் இதுவரை சிக்கினர் - பொலிஸ் பேச்சாளர் தகவல்

Report Print Tamilini in சமூகம்
11Shares

இலங்கையில் தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனாத் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கு புறம்பாகச் செயற்பட்டனர் என்ற குற்றச்ச்சாட்டில் இதுவரையில் 2 ஆயிரத்து 710 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுள் 2 ஆயிரத்து 600 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் கூறியதாவது:-

மேல் மாகாணத்துக்கு வெளியில் ஏனைய பகுதிகளில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை தொடர்பில் 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையில் 2 ஆயிரத்து 710 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 2 ஆயிரத்து 600 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்குப் புறம்பாகச் செயற்படும் நபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாகப் காணப்படும் பகுதிகளில் எழுமாறான அன்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் பஸ்கள், வான்கள் உள்ளிட்ட வாகனங்களில் தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு சட்ட விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகப் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.