மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது கொரோனா மரணம் பதிவு

Report Print Ashik in சமூகம்
155Shares

மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது கொரோனா தொற்று மரணம் நேற்று பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்று மேலும் 23 பேர் புதிதாக கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாபத்துறை பகுதியை சேர்ந்த 63 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த வாரம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விடுதி இலக்கம் 2இல் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நேரம் குறித்த விடுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டமையினால் இவருக்கும் பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் பீ.சி.ஆர்.பரிசோதனையின் போது தொற்று இல்லை என தெரிய வந்தது. இந்த நிலையில் குறித்த நபர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இவருக்கு நேற்று முந்தினம் இரவு சடுதியாக நோய் நிலை அதிகரித்தது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார்.

உயிரிழந்த பின் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையின் போது இவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் மன்னார் மாவட்டத்தில் 2 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது. இவர்கள் இருவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை விடுதி 2இல் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த போது அங்கு இருந்த நோயாளியுடன் தொடர்புபட்ட நிலையில் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என நம்புகின்றோம்.

ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 123 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது வரை 140 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜனவரி மாதம் மன்னார் மாவட்டத்தில் 2849 பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 7649 பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் ஒவ்வொறு நூறு பீ.சி.ஆர். பரிசோதனைகள் சமூகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற போது 3.9 வீத நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள்.

இது மன்னார் மாவட்டத்தில் தொற்றின் நிலை அதிகரித்து காணப்படுவதை எடுத்துக்காட்டுகின்றது.

எனவே மக்கள் அவதானத்தோடு,பொறுப்போடும் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி நடந்து கொள்ள வேண்டும் குறிப்பிட்டுள்ளார்.