தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் ஆய்வுகளின் போதும் இனங்களின் பன்மைத்துவ பிரதிநித்துவ பங்களிப்பு அவசியம் பின்பற்றப்படல் வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான முருகேசு சந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுவே இனங்களுக்கிடையேயான ஒற்றுமையினை பலப்படுத்தி, நாட்டில் அமைதிச் சூழலை உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும்,
தற்போது மேற்கொள்ளப்படுகின்ற தொல்லியல் ஆய்வுகளின் போது அனைத்து இனங்களின் துறைசார் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும். அப்போதே சந்தேகங்கள் நீக்கப்படும். உண்மைத் தன்மை பேணப்படும்.
இதுவே இனங்களுக்கிடையேயான நல்லுறவை மேலும் பலப்படுத்தும். தற்போது மேற்கொள்ளப்படுகின்ற தொல்லியல் நடவடிக்கைகள் தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே பதற்றத்தையும் சந்தேக நிலையையும் உருவாக்கியுள்ளன. இதைக் களைய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குண்டு.
எனவேதான் இவ்வாறான ஆய்வு நடவடிக்கைகயின் போது வெளிப்படைத்தன்மையுடன் துறைசார் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோரின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை நாம் வலியுறுத்துகின்றோம்.
மேலும் தொல்லியல் ஆய்வுகள் வரலாறுகளை கண்டுபிடிக்கும் நோக்கில் அமைய வேண்டுமே தவிர வரலாற்றுப் புனைவு மற்றும் வரலாற்று ஆக்கிரமிப்பு எண்ணங்களுடன் இடம்பெறக் கூடாது என்பதனையும் நாம் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்என்று குறிப்பிட்டுள்ளார்.