தாயின் சேலை ஊஞ்சலால் எட்டு வயது சிறுவன் பரிதாபமாக பலி!

Report Print Kumar in சமூகம்
1391Shares

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவர் ஊஞ்சல் சேலையில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது மகிழடித்தீவு,கட்டுப்பத்தை பகுதியினை சேர்ந்த மனோகரன் கேதீசன் என்ற எட்டு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாடசாலை விடுமுறை நாளான இன்று வீட்டின் அருகில் உள்ள மாமரத்தில் தாயாரின் சேலையொன்றில் ஊஞ்சல் அமைத்து விளையாடுவதற்கு முயற்சித்த போதே அந்த சேலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் தாயார் மாடுகளை மேய்ப்பதற்காக கொண்டு சென்று வீட்டுக்கு வந்த போது சேலையில் சிக்குண்ட நிலையில் இருந்தவரை மீட்டு மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் குறித்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டதுடன், மரண விசாரணையினை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்கான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.