உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இதன் காரணமாக வீட்டிலிருந்த 05 பேர் தற்காலிகமாகத் தோட்ட கழக மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும், மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாமென பிரதேச வாசிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தீ ஏற்பட்ட போது வீட்டிலிருந்தவர்கள் எரிவதைக் கண்டு கூச்சலிட்டதாகவும், அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
தீ இடம்பெற்ற தோட்டத்திற்கு உடனடியாக விஜயம் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் சம்பவத்தை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, இது தொடர்பாக உடபுஸ்ஸலாவ பொலிஸ் நிலையத்திற்குப் பிரதேச வாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களைக் கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.