யோகேஸ்வரன் மற்றும் சேயோனிடமும் பொலிஸார் விசாரணை

Report Print Navoj in சமூகம்
33Shares

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை சேயோன் ஆகியோரிடம் நேற்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிருஸ்ணபிள்ளை சேயோன் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலமும் பெறப்பட்டார்.

இது தொடர்பில் கிருஸ்ணபிள்ளை சேயோன் தெரிவிக்கையில்,

அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் என்னிடம் விசாரணை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் அழைப்பின் பேரில் நான் பொலிஸ் நிலையம் சென்றிருந்தேன்.

சுமார் ஒன்றரை மணி நேர விசாரணை மேற்கொள்ளப்பட்டு என்னிடம் அப்பேரணி தொடர்பில் வாக்குமூலமும் பெறப்பட்டது. நான் அவர்களுக்கு எங்கள் தரப்பு விடயங்களை மிகத் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றேன்.

இது ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் ஒரு ஜனநாயக ரீதியான போராட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மக்களின் அடிப்படை உரிமை சார்ந்த விடயங்களில் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஒரு அமைதியான பேரணியாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி நடைபெற்றது.

எனவே எவ்வித ஜனநாயக விரோதமுமற்ற முறையில் சிவில் சமூகங்களின் ஒழுங்கமைப்பில் மக்களுக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணிக்கு எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பூரண ஆதரவை வழங்கியது.

அதன் பேரிலேயே எங்கள் பங்களிப்பும்இ எங்கள் ஆதரவாளர்களின் பங்களிப்பும் இப்பேரணியில் இருந்தது என்ற விடயத்தை மிகத் தெளிவாகப் பொலிஸாரிடம் கூறியுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

அண்மையில் நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி பேரணியில் கலந்து கொண்டதற்காக கல்முனை பொலிஸாரும், பொத்துவில் பொலிஸாரும் விசாரணைகளை நடாத்தினர்.

21.02.2021 அன்று காலைவேளை வாழைச்சேனை விபுலானந்தர் வீதியிலுள்ள எனது இல்லத்திற்கு வருகை தந்த பொத்துவில் பொலிஸார் நான் தாய்மொழி தின நிகழ்வில் கலந்துகொண்டதன் நிமித்தம் சிலமணிநேரம் அங்கிருந்ததோடு, பின்னர் அன்றையதினம் பிற்பகல் வேளையில் நான் செல்லம் தியேட்டர் மோகன் நடத்திய தாய்மொழி தின நிகழ்வில் கலந்துகொண்டபோது குறித்த நிகழ்வு நடைபெற்ற செல்லம் தியேட்டருக்கு வருகை தந்து அங்கு என்னை ஒரு மணிநேரம் விசாரணைக்குட்படுத்தினர்.

பொத்துவில் பொலிஸார் மூவர் அந்த விசாரணையை மேற்கொண்டனர். நீதிமன்றக் கட்டளையினை மீறி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டதாக விசாரணையானது அமைந்திருந்தது.

அவ்விசாரணை நிறைவடைவதற்கு முன்பே செல்லம் தியேட்டருக்கு கல்முனை பொலிஸாரும் வருகை தந்து நீதிமன்றக்கட்டளை இருக்கும்போது கல்முனையில் குறித்த பேரணியில் கலந்துகொண்டதாக அவர்களும் என்னை விசாரணைக்குட்படுத்தினர்.

நான் வீட்டில் இல்லாத காரணத்தினாலும் தாய்மொழிதின நிகழ்வில் கலந்துகொண்ட செல்லம் தியேட்டரில் மோகனால் ஒழுங்குசெய்து தரப்பட்ட தனிமண்டபத்திலேயே அனைத்து விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.