வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதலாம் தரத்தில் இணைந்த மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Report Print Sumi in சமூகம்
121Shares

2021ஆம் ஆண்டு பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களை விட மிகவும் குறைவானதாகும், இது அபாயகரமானது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் புவனேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கும் தமிழ் பேசும் சமூக அமைப்புகளுக்கும் அனுப்பி வைத்துள்ள செய்தியில் மேலும்,

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் முதலாம் தரத்திற்கு இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கால் குறைவடைந்துள்ளது. இந்நிலைமை அபாயகரமானது.

உலக மக்கள் தொகை வருடந்தோறும் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைவடைவதில்லை. இலங்கையிலும் அதே நிலைதான்.

ஆனால் தமிழர் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இம்முறை மாணவர் தொகை குறைவடைந்துள்ளமை கவலையான விடயம் என்பதற்கு அப்பால் அபாயகரமானது.

நாட்டில் நடைபெற்ற யுத்தமானது நான்கு தசாப்தங்களை கடந்தது. அந்த காலங்களில் கூட பாடசாலைக்கு முதலாம் தரத்தில் இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்தே சென்றது.

ஆனால் இம்முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கில் மாணவர் எண்ணிக்கை குறைவடைந்தமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான காரணங்களில் பிறப்பு வீதம் குறைவடைந்தது எனத் தனியாகக் கூறிவிடமுடியாது. நாட்டின் பொருளாதார நிலை மிகவும் முக்கியமானது.

இதைவிட கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பெருமளவானோர் நகர்ப்புறத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். அதற்குத் தொழில் வாய்ப்பு ஒருகாரணம் என்பதற்கு அப்பால் பாரம்பரிய தொழில்கள் பல அழிவடைந்துள்ளன.

இதனால் வருமானமின்றி பிள்ளைகளை வளர்க்க முடியாத அளவிற்குப் பலர் தள்ளப்பட்டுள்ளனர். அரச சேவையில் உள்ள பலர் வங்கிகளில் பெருமளவு பணம் கடனாகப்பெற்று வாழ்க்கை நடத்துகின்றனர்.

இதற்கு அப்பால் நகர்ப்புறங்களில் உள்ள ஒரு சில பாடசாலைகளில் அளவுக்கு அதிகமான மாணவர்கள் சேர்க்கப்படுவதும், அப்பாடசாலைகளில் அனுமதியைப் பெறுவதற்குப் பெற்றோர் முண்டியடிப்பதும் அண்மைய காலங்களில் பெரும் பிரச்சினையாக உள்ளது.

இப்பாடசாலை அனுமதிக்காக உயர் பதவிகளில் உள்ளவர்கள்கூட கல்வித் திணைக்களம் என்றும், பாடசாலை என்றும், மனித உரிமைகள் ஆணைக்குழு என்றும் அலைந்து திரிவதையும் பலமணிநேரம் காத்திருப்பதையும் காணமுடிகின்றது.

மொத்தத்தில் பிள்ளைகளைப் பெற்றால் வளர்ப்பது, பராமரிப்பது, பாடசாலைகளில் சேர்ப்பது, கல்வியூட்டுவது, கண்காணிப்பது என்ற சுமைகளை மனதில் கொண்டு பிள்ளைகள் பெற்றுக்கொள்வதைப் பலரும் மட்டுப்படுத்தியுள்ளனர்.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பத்துப் பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாயும் எம்மத்தியில் எந்த ஏதுகரமும் இல்லாமல் தனது பிள்ளைகளைச் சிறப்பாக வளர்த்தாள் என்ற சான்றுகள் நிறையவே உள்ளன.

ஆனால் இன்று அரச சேவையில் உள்ள நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது வீதமானவர்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்கின்றனர்.

மாதாந்த வருமானமுள்ள அரச சேவையில் உள்ளவர்களே இவ்வாறு மட்டுப்படுத்தினால் வருமானமே இல்லாத பாமர மக்கள் எவ்வாறு குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆகையால் சமூக அக்கறை கொண்ட அனைவரும் இதற்கான தீர்வுக்குரிய வழிகளைக்கண்டறிந்து பிறப்பு வீதம் அதிகரிக்க அல்லது சந்ததிப் பெருக்கம் ஏற்பட வழியேற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.