வடக்கிலுள்ள பௌத்த எச்சங்கள்! முரண்பாடுகளின் காரணம் தொடர்பில் விளக்கும் யாழ். பல்கலையின் சிரேஸ்ட பேராசிரியர்

Report Print Thamilselvan in சமூகம்
176Shares

வடக்கில் காணப்படுகின்ற பௌத்த எச்சங்களை ஒரு மதத்தின் பண்பாடாக பார்க்கலாமே ஒழிய அதிலும் ஆதிகால எச்சங்களை ஒரு மதத்தின் பண்பாட்டு எச்சங்களாக பார்க்கலாமே தவிர ஒரு இனம் வாழ்ந்து மறைந்ததன் அடையாளமாக பார்ப்பதே முரண்பாடுகள் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாகும் என யாழ். பல்கலைகழகத்தின் தொல்லியல் வரலாற்றுத்துரை சிரேஸ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வழங்கிய நேர்காணலொன்றில்,

கேள்வி - வடக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தொல்லியல் ஆய்வுகள் பற்றி தங்களின் கருத்து?

பதில் - தொல்லியல் வரலாற்று ஆசிரியர் என்ற வகையில் சில உண்மைகளைக் கூற விரும்புகின்றேன். பொதுவாக இலங்கை தொல்லியல் சட்டத்தில் இலங்கையின் அனைத்து பாகங்களிலும் மண்ணுக்குள் மறைந்திருக்கின்ற மண்ணுக்கு வெளியே தெரிகின்ற வரலாற்றுப் பெறுமதியுடைய அனைத்து சின்னங்களும் மரபுச் சின்னங்களாக கருதப்பட வேண்டும் என்பது அதனுடைய கருத்தாகும்.

அத்தகைய இடங்களில் கண்டறிந்து ஆய்வு செய்து ஆவணப்படுத்தி பாதுகாக்கின்ற பொறுப்பும், அதிகாரமும் தொல்லியல் திணைக்களத்திற்கு உண்டு ஆயினும் இலங்கை பல்லினம், பல மதம் பண்பாடு கொண்ட ஒரு நாடு அது மல்டி கல்ச்சர் நேசன்.

ஆகவே அந்த மக்களுடைய பண்பாட்டு அடையாளங்களும் கண்டறிந்து ஆவணப்படுத்தப்பட வேண்டியது தொல்லியல் திணைக்களத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகவே காணப்படுகின்றது.

இன்று உலகின் எந்த ஒரு நாடும் தனித்து வளர முடியாத நிலை உருவாகி உள்ளது. அதனால் ஒரு நாட்டுக்குள் பல இன மக்கள், பல இன பண்பாடு கொண்ட மக்கள் வாழ்வதை உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன, வரவேற்றும் வருகின்றன.

இலங்கையும் ஒரு பல்லின பண்பாடு கொண்ட நாடு என்ற வகையில் பல இன மக்களுடைய பண்பாடும் இலங்கை பண்பாடு என்ற வட்டத்துக்குள் சில ஒருமைத் தன்மை கொண்டிருந்தாலும் ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு மொழி பேசுகின்ற மக்களுக்கும் ஒவ்வொரு மக்களின் மதங்களுக்கும் ஒரு தனித்துவமான அடையாளங்கள் உண்டு.

ஆகவே அந்த தனித்துவமான அடையாளங்களை கண்டறிந்து பாதுகாத்து வளர்ப்பதையிட்டு அந்த மக்கள் பெருமையடைகிறார்கள், மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஒரு நாட்டில் பண்டுதொட்டு வாழுகின்ற மக்கள் தங்களுடைய மரபுரிமை அடையாளங்களை நம்பிக்கை நாற்றாக கருதுகின்றார்கள். அதை சிறிதும் பிசகாமல் எதிர்கால சந்ததியிடம் கையளிப்பது அவர்களுக்குரிய ஒரு கடமையாகும்.

ஆகவே இன்று வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற தொல்லியல் ஆய்வு என்பது குறுகிய ஒரு பரப்புக்குள் இல்லாது அந்தப் பிரதேசத்திலே வாழுகின்ற பல்வேறு இனங்களின் பண்பாடுகளையும் கண்டறியும் வகையில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாகும்.

இன்று தொல்லியல் திணைக்களத்தால் வடக்கிலோ கிழக்கிலோ மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகள் குறிப்பிட்ட ஒரு மதத்தை மையப்படுத்தி மட்டும் மேற்கொள்ளப்படுகின்றது என்பதையிட்டு மக்களிடையே ஒரு அதிருப்தி நிலை இருப்பதை நான் காணுகின்றேன்.

ஆனால் இலங்கை என்ற நாட்டில் பல இன மக்கள் மகிழ்ச்சியாக, அமைதியாக வாழ்வதற்கு அந்த மக்களுக்கு உரிய மரபுரிமை அடையாளங்கள் அழிக்கப்படாது பாதுகாப்பாக கண்டறிந்து அவற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் தொல்லியல் திணைக்களத்திற்குரியதாகும்.

எதிர்காலத்திலே தொல்லியல் திணைக்களம் மேற்கொள்கின்ற ஆய்வுகளில் அவற்றைக் கருத்தில் கொள்வது இலங்கை மக்களிடையே ஐக்கியத்தையும் சினேகபூர்வத்தையும் வளர்க்க உதவும் என்பது என்னுடைய கருத்தாகும்.

கேள்வி - இந்த தொல்லியல் ஆய்வுகளின் போது துறைசார் தமிழ் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனரா? இல்லை எனில் அவர்கள் ஏன் உள்வாங்கப்படவில்லை?

பதில் - குருந்தூர்மலை அகழ்வாராச்சி ஆரம்ப நிகழ்வு நடைபெறும் வரைக்கும் அந்த இடத்திலே அகழ்வாய்வு நடைபெற இருப்பதாக எங்கள் எருவருக்குமே தெரியாது.

ஆயினும் அந்த ஆய்வு தொடங்கியதன் பின்னர் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுரா மனதுங்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுடைய ஆய்வில் என்னையும் பங்கு எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பேராசிரியர் அநுரா மனதுங்கவுடன் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நட்போடு பழகிய ஒருவர் எங்களுடைய பல்கலைக்கழக தொல்லியல் பாடநெறி சம்பந்தமான உருவாக்கத்தில் அவருக்கு பங்குண்டு.

நம்முடைய ஆசிரியர் சிலர் அவருக்கு கீழே முதுகலைமானிப்பட்டம் கற்கையை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அந்த ஒரு நட்பின் அடிப்படையில் அவர் என்னை அழைத்திருந்திருந்தாலும் அந்த ஆய்விலே பங்கெடுக்க கூடிய சூழ்நிலை எனக்கு இருக்கவில்லை.

ஒன்று என்னுடைய சுகயீனம், இரண்டாவது வருடத்தில் ஆய்வு செய்யப்படுகின்ற பொழுது எந்த இடத்தில் ஆய்வு செய்யப்படுகின்றது, எதுவரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது போன்ற விவரங்களை முன்கூட்டியே கலந்து ஆலோசித்த பின்னர் அவர்களோடு இணைந்து ஆய்வு செய்வதை நாங்கள் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் கருதுகிறோம்.

ஆனால் ஒரு ஆய்வு தொடங்கியதன் பின்னர் ஒருசில தமிழர் தமிழ் அறிஞர்களையும் இணைத்துக் கொள்வது என்பது அவர்களுடைய ஆய்வுகளை நாங்கள் சந்தேகிப்பதாக அவர்கள் கருதுவதற்கும் வழிவகுக்கலாம்.

அங்கு செல்லுகின்ற எமக்கும் அது ஒரு சங்கடமான நிலையாகவும் இருக்கலாம் என்ற ஒரு கருத்து என்னிடத்தில் உண்டு. இருப்பினும் அந்த ஆய்வு நடைபெறும் இடத்துக்கு செல்வதற்கு நான் தீர்மானித்திருக்கிறேன்.

முழுமையாக அகழ்வாய்வில் பங்கெடுப்பேன் என்று சொல்ல முடியாது. இருப்பினும் எமது பல்கலைக்கழகத்தில் தொல்லியல் பட்டம் பெற்று இப்பொழுது தொல்லியல் திணைக்களத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் நிரந்தரமான பதவிகளில் இருக்கிறார்கள். அவர்களிடையே நல்ல அனுபவங்கள் உண்டு.

ஏனென்றால் அவர்கள் தென்னிலங்கை தொல்லியல் அறிஞர்களோடு ஒரு சில இடங்களிலே அகழ்வாய்வுகள் செய்தவர்கள்.

அதற்கப்பால் மேற்கத்தேய நாடுகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் அவர்கள் பங்கெடுத்தவர்கள்.

அதனடிப்படையில் நான் பேராசிரியர் அநுரா மனதுங்கவிடம் எமது தொல்லியல் திணைக்களத்தில் உள்ள அதிகாரிகளையும் நீங்கள் நினைத்துக் கொள்ளலாம் என்று கேட்டத்திற்கு இணங்க தற்போது அங்கு மணிமாறன் என்பவர் அந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளார்.

அவர்கள் அங்கு வேலை செய்கின்ற தமிழ் அதிகாரிகள் மாறி மாறி அந்த இடத்தில் பங்கெடுக்க இருக்கின்றார்கள்.

ஆயினும் எதிர்காலத்தில் வடக்கு, கிழக்குப் பகுதியிலும் சரி இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் சரி அகழ்வாய்வுகள் நடக்கின்ற போது அவற்றில் தமிழ் ஆகழ்வாராச்சியாளர்களையும் இணைத்துக் கொள்வதாக பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதிமொழி வழங்கியுள்ளார்.

எனவே பொறுத்திருந்து பார்ப்போம் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளகின்ற அகழ்வாராச்சிகளின் போது தமிழ் அதிகாரிகள் மற்றும் மாணவர்களை இணைத்துக்கொள்வார்களா என்பதனை என குறிப்பிட்டுள்ளார்.