வாகன இறக்குமதிக்கான தடை ஆண்டு இறுதிவரை நீடிப்பு

Report Print Kanmani in சமூகம்
53Shares

வாகன இறக்குமதியை நிறுத்தி வைக்கும் முடிவு இந்த ஆண்டின் இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரூபாய்க்கான பெறுமதியின் அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் மோசமான பொருளாதார கொள்கையின் அடிப்படையில் தன்னிச்சையாக இந்த முடிவினை எடுத்ததா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

அத்தோடு அரசாங்கத்தின் மோசமான பொருளாதார கொள்கைகள் காரணமாக வர்த்தகத்தில் ஈடுபடும் விற்பனையாளர்கள் உட்பட பலர் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிக தடை எதிர்காலத்தில் நாணய மாற்று விகிதத்தின் ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர், வாகன இறக்குமதிக்கு 2021 இறுதி வரை தடை தொடரும் என்றும் ஆண்டின் இறுதியில் இந்த நிலைமை குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் கூறினார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக, வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.