எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியல் முன்னெடுக்கப்படும் என்கிறார் திலகராஜ்

Report Print Thirumal Thirumal in சமூகம்
35Shares

எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியுடன் தொழிலாளர் தேசிய முன்னணி முடிவடைந்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து எம்.எஸ்.செல்லசாமி விலகிச் சென்ற சந்தர்ப்பத்தில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னத்திலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சூழ்ச்சி காரணமாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னம் இல்லாது செய்யப்பட்டது. இந்த பின்னணயிலேயே, தொழிலாளர் தேசிய முன்னணி என்ற கட்சியை நான் யாப்பு எழுதி உருவாக்கினேன்.

இவ்வாறான நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வருகைத் தந்துள்ள ஒரு கூட்டம், தொழிலாளர் தேசிய முன்னணியை இல்லாதொழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாகவே, என்னை அந்த கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த கட்சியை அவர்களின் தேவைக்கு ஏற்ப நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனாலேயே கட்சியை கலைக்கும் தீர்மானத்தை எடுத்து, தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகியிருந்தேன்.

இனிவரும் காலங்களில் அவர்கள் வேறொரு அரசியல் கட்சியை உருவாக்கி செயற்படுவதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது.

எனினும், தொழிலாளர் தேசிய முன்னணியின் ஊடாக அடைய நினைத்த அரசியல் இலக்குகளை, எதிர்வரும் காலத்தில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை கட்டியெழுப்புவதாக உறுதியளித்துள்ளார்.