ஐ.சி.சியிடம் புகார் கூறிய இலங்கைக் கிரிக்கெட் வாரியம்!

Report Print Samy in கிரிக்கெட்

டெல்லி காற்று மாசுபாடு தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இலங்கைக் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் நடந்தது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாளில் காற்று மாசுபாடு காரணமாக, இலங்கை வீரர்கள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது.

மேலும், முகமூடி அணிந்து கொண்டு இலங்கை வீரர்கள், இரண்டாவது நாளில் களத்தடுப்பு செய்தனர். இதனால், இந்திய அணி, இன்னிங்ஸை டிக்ளேர் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருந்த நிலையில், போட்டி நடத்தப்பட்டதாகக் கூறி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இலங்கைக் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.

இந்தத் தகவலை இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரா தெரிவித்தார்.

இது தொடர்பாக ஐ.சி.சியிடம் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டதாகவும், 4 வீரர்கள் வாந்தி எடுக்கும் அளவுக்குப் பாதிக்கப்பட்டதால், இது போன்ற சூழலில் தங்களால் விளையாட முடியவில்லை’ என்றும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

டெல்லி டெஸ்டில் களத்தடுப்பின் போது முகமூடி அணிந்து விளையாடிய இலங்கை வீரர்கள் பேட்டிங்கின் போது அணியவில்லை. இதையடுத்து இலங்கைக் கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் முறைப்பாடு செய்துள்ளது.

- Vikatan