இலங்கை கிரிக்கெட்டுக்குள் பூகம்பம்: அமைச்சர் எச்சரிக்கை

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

”வாக்குகளுக்காக விளையாட்டுக் கழகங்களை பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் சொல்வதை கிரிக்கெட் நிர்வாகத்தினர் செவிசாய்த்து அமுல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதன் காரணமாக இந்நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த நடைமுறையை இல்லாதொழிக்க இந்நாட்டிலுள்ள 150இற்கும் அதிகமான கழகங்களின் வாக்குகளை 75ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். அவ்வாறு குறைக்க முடியாவிட்டால் தற்போதுள்ள கிரிக்கெட் நிர்வாகத்தை உடனே கலைத்துவிட்டு அந்த சீர்திருத்தத்தை மேற்கொள்வேன்” என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது இணை ஊடகப் பேச்சாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகரவிடம் இலங்கை கிரிக்கெட்டின் அண்மைக்கால பின்னடைவுக்கு திலங்க சுமதிபால தலைமையிலான நிர்வாகத்தினர் பொறுப்புக்கூற வேண்டும் எனவும், விளையாட்டுத்துறை அமைச்சராக இதை நீங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றீர்களா? எனவும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

”கடந்த 8 வருடங்களாக இடைக்கால நிர்வாக சபையுடன் இயங்கிவந்த இலங்கை கிரிக்கெட்டை கலைத்துவிட்டு ஜனநாயக ரீதியிலான தேர்தல் மூலம் தற்போதுள்ள நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது. எனவே ஜனநாயகத்தின் மீது தேவையில்லாமல் தலையிடுவதற்கு நான் விரும்பவில்லை. அத்துடன், இந்நாட்டில் 150இற்கும் அதிகமாக கழகங்கள் மூலமாகவே இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

உண்மையில் இந்த எண்ணிக்கையை 75ஆக குறைப்பதற்கு அடுத்த வருடத்துக்குள் உரிய நடவடிக்கை எடுப்பேன். அவ்வாறு செய்வதற்கு முடியாது போனால் தற்போதுள்ள கிரிக்கெட் நிர்வாகத்தை கலைத்துவிட்டாவது உரிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

மேலும், இந்நாட்டின் கிரிக்கெட்டில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக ஹேமக அமரசூரிய தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் முன்னாள் வீரர்களான அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகிய வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கிரிக்கெட் திட்டமொன்றை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது” எனத் தெரிவித்த அமைச்சர், அதில் ஒருசிலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 9 வீரர்களை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அழைத்தமை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,

”இந்நாட்டின் விளையாட்டு யாப்பின்படி விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியில்லாமல் எந்தவொரு வீரருக்கும் நாட்டிற்கு வெளியே சென்று சர்வதேச மட்டப் போட்டிகளில் பங்குபற்ற முடியாது.

குறைந்தது 21 நாட்களுக்கு முன்னர் அணித்தேர்வை நடாத்தி விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த நாட்டிலுள்ள அனைத்து சங்கங்களும் இறுதி நேரத்தில்தான் அணித் தேர்வை நடத்தி எனது அனுமதிக்காக பெயர் விபரங்களை அனுப்பி வைப்பார்கள்.

அதிலும் குறிப்பாக கிரிக்கெட் சபையை போன்று இந்நாட்டிலுள்ள ஒருசில முன்னிலை விளையாட்டு அமைப்புகள் இந்த நடைமுறையை பின்பற்றுவதில் பொடுபோக்காக செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

எனவே, இந்திய தொடருக்கான இலங்கை ஒரு நாள் அணியும் என்னிடம் அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமலேயே விமானநிலையம் சென்றனர். எனினும் ஒரு நாள் தொடருக்கான அணியை தெரிவுக்குழுவினர் கடந்த முதலாம் திகதி தெரிவுசெய்துள்ளனர்.

ஆனால் அதற்கான பெயர் விபரங்கள் வெள்ளிக்கிழமை மாலைதான் எனக்கு கிடைத்தது. இந்த விடயங்கள் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவருக்கு தெரியாமல் நடைபெற்றுள்ளது.

அதற்கு தற்போது இடம்பெற்றுவருகின்ற டெஸ்ட் தொடர் மற்றும் இடைக்காலப் பயிற்றுனரான நிக் போதாஸ் மற்றும் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ள சந்திக்க ஹத்துருசிங்க ஆகியோரின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்வதற்கு காலதாமதம் ஏற்பட்டதாக கிரிக்கெட் அதிகாரிகள் காரணம் தெரிவித்திருந்தனர்.

எனினும், நாட்டில் சட்டமொன்று உள்ளது. இந்த நாட்டின் சட்டம் எல்லா வீரர்களுக்கும் பொருந்தும். அதனால்தான் அவர்களை திருப்பி அழைக்குமாறு கிரிக்கெட் சபைக்கு உத்தரவிட்டேன். இதுதான் நான் கிரிக்கெட் சபைக்கு வழங்குகின்ற கடைசி மன்னிப்பாகும்” என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், விசாரணைகளின் முடிவில் விமான டிக்கெட்டுக்கான அனைத்து நஷ்டங்களையும் குறித்த அதிகாரிதான் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் எனவும், அவ்வாறு நடந்துகொண்ட அதிகாரி தொடர்பில் அறிக்கையொன்றை சமர்பிக்குமாறும் தான் கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, கௌஷால் சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் உள்ளிட்ட ஒரு சில வீரர்களை இந்திய தொடருக்கு ஏன் தெரிவுசெய்யவில்லை என சமூகவலைத்தளங்கள் வாயிலாக பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதுதொடர்பில் நான் தெரிவுக்குழுவிடம் வினவியபோது, அவர்கள் உடற்தகுதி பரிசோதனையில் தோற்றவில்லை எனவும், ஒருசில வீரர்கள் பயிற்சிகளுக்கு சமூகமளிக்கவில்லை எனவும் தெரவுக்குழுவினர் எனக்கு அறிவித்தனர்.

எனவே அணித்தேர்வு குறித்து என்னையும், இலங்கை கிரிக்கெட் சபை தலைவரையும் திட்டி எந்தப் பயனும் கிடையாது. சிறந்த அணியொன்றை போட்டிகளுக்காக தெரிவுசெய்து அனுப்ப வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இதேவேளை, ஒவ்வொரு தொடருக்கும் புதிய தலைவர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது. இதுதொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கருத்து வெளியிடுகையில்,

”இலங்கை அணியின் தலைவர்கள் குறித்தும் நிறைய முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஒருசிலர் தமக்கு தேவையான வீரர்களை தலைவர்களாக நியமித்து விளையாடுகின்றனர். எனினும், 2019 உலகக் கிண்ணம் வரை அணியை வழிநடாத்துவதற்கு பொருத்தமான வீரராக திஸர பெரேராவின் பெயரை பலர் முன்மொழிந்திருந்தனர்.

அதன்படி இந்திய தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஒவ்வொரு தொடருக்கும் புதுப்புது தலைவர்களை நியமிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதற்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Latest Offers