டக் அவுட் ஆன அர்ஜூன் டெண்டுல்கர்: அதிரடி சதம் அடித்த மதுஷ்க!! தடுமாறும் இலங்கை அணி!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

சுற்றுலா இந்திய கனிஷ்ட கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கிடையில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட முதலாவது இளையோர் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று முடிவடைந்தது.

மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும்போது, தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இலங்கை கனிஷ்ட அணியினர் நிஷான் மதுஷ்க பெற்றுக் கொண்ட சதத்துடன் நல்ல நிலையில் உள்ள போதிலும், இந்திய கனிஷ்ட அணியின் முதல் இன்னிங்ஸை விட 168 ஓட்டங்களால் பின்தங்கியிருக்கின்றனர்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கனிஷ்ட கிரிக்கெட் அணி இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணியுடன் இரண்டு இளையோர் டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து இளையோர் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.

அந்த வகையில் இந்திய கனிஷ்ட கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தில் ஒரு அங்கமாக நடைபெறுகின்ற இளையோர் டெஸ்ட் தொடரின் இந்த முதலாவது டெஸ்ட் போட்டி கொழும்பு NCC மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

இப்போட்டியின் இரண்டாம் நாள் நிறைவின் போது, இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸை (244) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இந்திய கனிஷ்ட அணி அதர்வா டைட் (117) மற்றும் அயுஸ் படோனி ஆகியோரின் அபார சதங்களின் உதவியுடன் 473 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து மிகவும் வலுவான நிலையில் காணப்பட்டிருந்தது.

களத்தில் சதம் தாண்டிய அயுஸ் படோனி 107 ஓட்டங்களுடனும், நெஹால் வதேரா 81 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தார்.

இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடர்ந்தது. நெஹால் வதேரா ஒரு ஓட்டத்தை மாத்திரம் இன்றைய நாளில் பெற்று 82 ஓட்டங்களுடன் இலங்கையின் வலதுகை சுழல் வீரரான கல்ஹார சேனாரத்வின் சுழலில் போல்ட் செய்யப்பட்டார்.

மூன்றாம் நாளின் ஆரம்பத்திலேயே இலங்கை கனிஷ்ட அணி இவ்வாறு ஒரு விக்கெட்டை கைப்பற்றியது அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.

இதனால், இலங்கையின் பந்துவீச்சுத்துறை இந்திய கனிஷ்ட அணியின் ஏனைய பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களையும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்தது.

இதில் இந்திய கனிஷ்ட அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜூன் டெண்டுல்கர் இதில் ஓட்டம் ஏதுமின்றி தனது விக்கெட்டை பறிகொடுத்திருந்தார்.

எனினும், சதம் கடந்த அயுஸ் படோனி அவரது துடுப்பாட்ட இன்னிங்ஸை இன்னும் விரிவு படுத்தினார்.

படோனியின் துடுப்பாட்ட உதவியோடு இந்திய கனிஷ்ட அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இமலாய 589 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

இந்திய கனிஷ்ட அணியின் துடுப்பாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்ற அயுஸ் படோனி 4 சிக்ஸர்கள் மற்றும் 19 பெளண்டரிகள் அடங்கலாக 185 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இலங்கை கனிஷ்ட அணியின் பந்துவீச்சில் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியர் கல்லூரியின் கல்ஹார சேனாரத்ன 6 விக்கெட்டுக்களையும், கல்கிசை புனித தோமியர் கல்லூரியின் கலன பெரேரா 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

இதனையடுத்து, இலங்கை கனிஷ்ட அணி தமது எதிர்தரப்பினை விட 345 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.

இலங்கை கனிஷ்ட அணியில் ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்திருந்த கமில் மிஷார 13 ஓட்ட்ஙகளுடன் ஏமாற்றம் தந்த போதிலும், மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மொரட்டுவ வித்தியாலயத்தின் நிசான் மதுஷ்க இந்திய கனிஷ்ட அணியின் பந்துவீச்சாளர்களை திறமையான முறையில் முகம் கொடுத்து சதமொன்றை விளாசினார்.

தொடர்ந்து, மதுஷ்கவின் விக்கெட்டை இந்திய கனிஷ்ட அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மொஹிட் ஜங்ரா கைப்பற்ற, மதுஷ்கவின் பின்னர் இலங்கை கனிஷ்ட அணி மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைய முன்னர் இன்னுமொரு விக்கெட்டினையும் பறிகொடுத்திருந்தது.

இதன்படி, போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் இலங்கை கனிஷ்ட அணி தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக 177 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.

இலங்கை கனிஷ்ட அணியின் துடுப்பாட்டத்தில் சதம் விளாசிய நிசான் மதுஷ்க 2 சிக்ஸர்கள் மற்றும் 17 பெளண்டரிகள் அடங்கலாக 104 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதேவேளை, இலங்கை கனிஷ்ட அணியில் பறிபோயிருந்த மூன்று விக்கெட்டுக்களின் மீதும் இந்திய கனிஷ்ட அணியின் மொஹிட் ஜங்ரா தனது பெயரை பதிவு செய்திருந்தார்.

தற்போது இந்தியாவை விட 168 ஓட்டங்கள் பின்தங்கி காணப்பட்ட நிலையில் இன்னும் ஏழு விக்கெட்டுக்களை மீதமாக வைத்திருக்கும் இலங்கை கனிஷ்ட அணி போட்டியின் நாளைய நான்காவதும் இறுதியுமான நாளில், நல்ல முடிவு ஒன்றைப் பெற்றுக் கொள்ள போராட்டம் மேற்கொள்ளவிருக்கின்றது.

Latest Offers