மன்னாரில் மகளிர் தினத்தன்று சாதித்த பெண்கள்..!

Report Print Ashik in குற்றம்
42Shares

மன்னார் பேசாலை 50 வீட்டுத்திட்ட மக்கள் தமது கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரி மகளிர் தினமான இன்று புதன் கிழமை (8) மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமாரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த கிராம மக்களின் முதற்கட்ட பிரச்சினையாக வீதி பிரச்சினையை தீர்க்கும் வகையில் குறித்த வீதியை புனரமைப்பு செய்வதற்காக மன்னார் பிரதேச செயலாளர் உடனடியாக 5 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மன்னார் மாவட்ட வளர்பிறை பெண்கள் அமைப்பின் மன்னார் மாவட்ட பொறுப்பதிகாரி ரி.மேரி பிரியங்கா தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் வளர்பிறை பெண்கள் அமைப்பினால் பேசாலை 50 வீட்டுத்திட்ட கிராம மக்களின் அடிப்படை பிரச்சினை குறித்து மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமாரிடம் இன்று (8) புதன் கிழமை காலை மீனவ ஒத்துழைப்பு பேரவையூடாக மாவாட்ட வளர்பிரை பெண்கள் அமைப்பின் மன்னார் மாவட்ட பொறுப்பதிகாரி ரி.மேரி பிரியங்கா தலைமையில் மகஜர் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போதே மன்னார் பிரதேசச் செயலாளர் குறித்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

மன்னார் பிரதேசச் செயலாளரிடம் வழங்கப்பட்ட மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,

எமது கிராமமானது, 2006ஆம் ஆண்டு (ஜே.ஆர்.எஸ்) நிறுவனத்தினால் திட்ட வீடுகளாக கட்டித்தரப்பட்டது. எமது கிராமத்திற்கு செல்வதற்கு பேசாலை நகரத்திலிருந்து 5 கிலோ மீற்றர் செல்ல வேண்டும்.

2006 ஆம் ஆண்டு பேசாலையில் நடை பெற்ற யுத்த அனர்த்தம் காரணமாக 50 வீட்டுத்திட்டத்தில் வாழ்ந்த மக்கள் குறித்த கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்து பேசாலையில் உறவினர்கள் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வந்தனர்.

அதன் பின் மீண்டும் 2010 ஆம் ஆண்டு மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். ஆனால் மீள் குடியேற்றம் என்றாலும் அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும், யுத்தத்தினால் வீடுகள் உருக்குலைந்த நிலையிலும், கிணறுகள் நூர்க்கப்பட்டதோடு வீட்டின் ஓடுகள், கதவுகள், யன்னல்கள் களவாடப்பட்டும் காணப்பட்டது.

இதனால் மன்னார் வீடமைப்பு அதிகார சபையினால் ஒரு இலட்சம் மானியமாகவும், 1 இலட்சம் கடனாகவும் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனாலும் சிலருக்கு மானியம் இற்றை வரைக்கும் முழுமையாக கிடைக்கவில்லை.

எமது மக்கள் மிகவும் வறியவர்கள். அன்றாடம் உழைத்து பிழைப்பு நடாத்தி வருகின்றனர். இந் நிலையில் எமது கிராமத்திற்கு செல்லும் வீதியானது மிகவும் மோசமடைந்த நிலையிலும், குண்றும் குழியுமாகக் காணப்படுகின்றது.

ஒவ்வொரு நாளும் மக்கள் பேசாலைக்குத் தான் வேலைக்கும், ஆலயத்திற்கும், அரச ஸ்தாபனங்களுக்கும் செல்ல வேண்டும்.

மக்கள் வறியவர்கள் என்பதினால் துவிச்சக்கர வண்டிகளிலும் நடந்துமே தமது பயணத்தை மேற்கொள்கின்றனர். ஏனைய வண்டிகள் அவ் வீதியின் நிலை அறிந்து வாடகைப் பணத்திற்கு (ஆட்டோ) கூட அவ் வீதியால் செல்ல மறுக்கின்றனர்.

அத்தோடு மழை வந்து விட்டால் பாவனைக்கு அற்ற வீதியாக மாறி விடுகின்றது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு எமது வீதியை புனரமைத்து தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மகஜரின் பிரதிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய,வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் போன்றவற்றிற்கும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments