10 தடவைகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு வந்த நபருக்கு கடூழிய சிறைத் தண்டனை

Report Print Mubarak in குற்றம்

கஞ்சா போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் சிக்கி 10 தடவைகள் வரையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிக்கு இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று 01 இனைச் சேரந்த பஸ்மிர் என்ற நபரே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பஸ்மிர் இன்றைய தினமும் அக்கரைப்பற்று நீதிமன்றில் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது தான் குற்றத்தை ஏற்றுக் கொள்வதாகவும், தமது சொந்த பாவனைக்கென அதனை வைத்திருந்தாதாகவும், தனக்கு திருந்தி வாழ சந்தர்ப்பத்தை வழங்குமாறும் தமது சட்டத்தரணிகள் ஊடாக மன்றுரை செய்துள்ளார்.

இவரது சார்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணத்தை அடுத்து அக்கரைப்பற்று நீதிபதி பீற்றர் போல், கடந்த காலங்களில் 10 தடவைகள் கஞ்சா வைத்திருந்தமை மற்றும் விற்பனை தொடர்பில் பஸ்மிருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றின் முன் பொலிஸார் ஆஜர்படுத்தியிருந்தனர்.

அப்போது, இவர் திருந்தி வாழ வேண்டுமென்ற நோக்குடன் இவரது கருணை மனுக்களை ஏற்றுக்கொண்டு, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் அதனை பொருட்படுத்தாது, உதாசீனப்படுத்தி, தான் மட்டுமல்ல தான் வாழ்ந்து வரும் சமூகத்திற்கும் பாதிப்பு எற்படும் விதத்தில் புதிய குற்றத்துடன் மன்றில் முன்வைக்கும் மன்றாட்டத்தை நீதிமன்று மறுப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்றிலிருந்து அமுலிற்கு வரும் வகையில் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு குற்றவாளிக்கு கடூழிய சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.