யாழில் வீடொன்றுக்குள் புகுந்த அடாவடிக் கும்பல் - நடந்தது என்ன?

Report Print Tamilini in குற்றம்

மானிப்பாய் நவாலி வடக்கிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த அடாவடிக் கும்பல் அங்கிருந்த இளைஞனை வாளால் வெட்டிக் காயப்படுத்தியதுடன் வீட்டின் தளபாடங்களை பெற்றோல் ஊற்றிக் கொழுத்திவிட்டுத் தப்பித்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய் நவாலி வடக்கில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் கையில் படுகாயமடைந்த சத்தியசீலன் சயந்தன் (வயது 20) என்ற இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

“மோட்டார் சைக்கிள் ஒன்றில் முகத்தை துணியால் மூடியவாறு மூன்று பேர் வாள்களுடன் வந்தனர். அவர்கள் வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, சவுண்ட் சாதனங்கள் மற்றும் கண்ணாடி அலுமாரி என்பவற்றைக் கைக் கோடாரியால் கொத்திச் சேதப்படுத்திவிட்டு அவற்றை பெற்றோல் ஊற்றித் தீவைத்தனர்.

அத்துடன், இளைஞனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். அவர்கள் மூவரையும் அடையாளம் காணமுடியவில்லை” என்று ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.