குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்

Report Print Tamilini in குற்றம்

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக முகங்களை அடையாளம் காணும் தொழிநுட்பத்தை உபயோகிப்பதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆள்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் சிறிலங்கா டெலிகொம் ஆகியன ஒன்றிணைந்து தரவுத் தொகுதிகளை தொடர்புபடுத்தி இந்த பொலிஸ் தொடர்பாடல் கட்டமைப்பினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் சட்டத்தின் பிடியிலிருந்து விலகிச் செல்பவர்கள் பற்றிய தகவல்கள் குறித்த கட்டமைப்பிற்கு உட்படுத்தப்படுவதுடன், எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் எவ்விடத்திலிருந்தும் அலைபேசியின் ஊடாக அக்கட்டமைப்புடன் தொடர்பு கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனூடாக குற்றவாளிகளை துரிதமாக சட்டத்தின் முன்கொண்டு செல்லவும் போக்குவரத்து குற்றங்களை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையே இன்று (29) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொலிஸ் திணைக்களத்தினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் அதன் மனித வள மற்றும் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்து சிறந்த பண்புத்தரமான பொலிஸ் சேவையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், அதன் கீழ் இந்த புதிய வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனிடையே ரயில் கடவைகளில் இடம்பெறும் விபத்துக்களை குறைப்பதற்கு முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தற்போது நாட்டில் பாதுகாப்பு வேலிகளைக் கொண்ட ரயில் கடவைகள் 280 காணப்படுவதுடன், 344 கடவைகளில் மணியடித்தல் மற்றும் மின்விளக்கினை ஒளிரச் செய்யும் முறை பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 539 புகையிரதக் கடவைகளிலும் மணியடித்தல் மற்றும் மின்விளக்கினை ஒளிரச் செய்யும் முறையினை விரைவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான உத்தியோகபூர்வ வதிவிட தேவைகள், பொலிஸ் நிலையங்களுக்கான வசதிகளைப் பெற்றுக்கொள்ளல், கிளிநொச்சி, மாங்குளம், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, ஒட்டுச்சுட்டான், முல்லைத்தீவு, மல்லாவி ஆகிய பொலிஸ் நிலையங்கள் மற்றும் யாழ்ப்பாணம் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் உள்ளிட்ட புதிய பொலிஸ் நிலையங்களின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பொலிஸ் நிலையங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் உத்தியோகபூர்வ வதிவிடங்களை நிர்மாணிப்பதற்காக 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டினை சமர்ப்பிக்கப்படவுள்ள எதிர்வரும் வரவுசெலவு திட்டத்தில் உள்ளடக்குதல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் நீண்ட காலமாக பதவி உயர்வுகளைப் பெறாத சுமார் 31 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்குதல் தொடர்பான நடவடிக்கைகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், 03 பிரிவுகளின் கீழ் அவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் அர்ஜுன ரனதுங்க, பதில் கடமை பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன உள்ளிட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் மூத்த பொலிஸ் அதிகாரிகள் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர் என குறிப்பிடப்பட்டுள்ளது.