முச்சக்கரவண்டி சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கியவர் கைது

Report Print Thileepan Thileepan in குற்றம்

வவுனியாவில் முச்சக்கர வண்டி சாரதியை கொடூரமாக தாக்கிய இளைஞன் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்ற இளைஞன் ஒருவர் அதன் சாரதியை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்ற இளைஞன் ஒருவன் வவுனியா வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலடியில் இறங்கியுள்ளார். இதன்போது வாடகை பணம் 250 ரூபா எனவும் அதனை தருமாறும் முச்சக்கர வண்டி சாரதி கேட்டுள்ளார்.

பணத்தை தர முடியாது எனக் கூறி, குறித்த இளைஞன் முச்சக்கர வண்டி சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதுடன், முச்சக்கர வண்டியையும் தாக்கி சேதமாக்கியுள்ளார்.

இந்நிலையில் தகவல் அறிந்து குறித்த பகுதிக்கு சென்ற ஏனைய முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் அவசர பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் தாக்கியதாக தெரிவிக்கப்படும் இளைஞனை கைது செய்ததுடன் அவரிடமிருந்து, கூரிய ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியான பா.சிறிதரன் 51 வயது என்ற குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யபட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இளைஞன் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.