வெள்ளை வான் தொடர்பில் கைதான சாரதிகளை விசாரித்ததில் கிடைத்த முக்கிய தகவல்கள்

Report Print Tamilini in குற்றம்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஏற்பாட்டில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் தம்மை வெள்ளை வானின் சாரதிமார் என அறிமுகப்படுத்திய இருவரும் சி.ஐ. டியினரால் கைதானதையடுத்து அவர்களிடம் நடத்தப்படும் விசாரணைகளின்போது பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இருவரும் குறிப்பிட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்ள சுமார் முப்பது லட்ச ரூபாவை வெகுமதியாக பெற பேரம் பேசப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் கொழும்பு செட்டியார் தெருவில் மூன்றரை கோடி , ஜா – எலையில் 75 லட்ச ரூபா , கந்தானை மற்றும் கொட்டாஞ்சேனையில் தலா 10 லட்ச ரூபா கொள்ளைச் சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புபட்டவர்களென்றும் , இந்த இருவரில் ஒருவர் ‘உண்டியல் அத்துல’ என்ற மோசடி புள்ளி என்றும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

அத்துடன் இவர்கள் பலரை கடத்திக் கொலை செய்துள்ளமையும் தெரியவந்துள்ளதால் நீதிமன்றில் இவர்களை ஆஜர்படுத்தி மேலதிக விசாரணைகளை நடத்த சி ஐ டியினர் தீர்மானித்துள்ளனர். இன்று இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அவர்களை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினர் தீர்மானித்திருந்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.