கணவனை மிரட்ட தன்னைத் தானே எரித்துக்கொண்ட இளம்பெண் மரணம் - யாழ். அச்சுவேலியில் சம்பவம்

Report Print Tamilini in குற்றம்

மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்யப் போவதாக கணவனை மிரட்டிய இளம்பெண் தீயில் எரிந்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இச் சம்பவத்தில் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த 29 வயதான கசீபன் கீர்த்தனா என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

அச்சுவேலி தெற்கில் வசித்து வரும் குறித்த இக் குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்குமிடையில் தொடர்ச்சியாக முரண்பாடுகள் ஏற்பட்டு வந்துள்ளது.

இந் நிலையில் கடந்த மாதம் 18ம் திகதி கணவனுக்கு முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்யப் போவதாக மனைவி மிரட்டியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மனைவியின் உடலில் தீ பற்றி எரிந்தது. தீக் காயங்களுக்குள்ளான பெண்ணை உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

இந்த உயிரிழப்புத் தொடர்பான விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.