இலங்கை கடற்பரப்பில் பெருமளவு தங்கம் மீட்பு!

Report Print Tamilini in குற்றம்

இலங்கை கடற்பரப்பில் பெருந்தொகை தங்கக்கட்டிகள் தமிழக கடலோர காவற்படையால் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கடத்திச் செல்லுகையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, கடலுக்குள் தூக்கியெறியப்பட்ட சுமார் 14 கிலோ தங்கத்தை இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத் துறை, கடலோர காவற்படை உதவியுடன் மீட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்குத் தங்கத்தை சிலர் கடத்திவருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் இலங்கையிலிருந்து மீன்பிடிப் படகின் மூலம் ராமேஸ்வரம் வருவதாகவும் தெரியவந்தது.

அந்த படகு தமிழக கடற்பகுதியை மார்ச் 3ஆம் திகதியன்று நெருங்கிய நிலையில், இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவர்கள் வந்த படகை சுற்றி வளைத்தனர். படகிலிருந்தவர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.

ஆனால், அவர்களிடம் தங்கம் ஏதும் இல்லாத நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்கள் தங்கத்தை கடத்தி வந்ததையும் அதிகாரிகளைப் பார்த்ததும் தங்கத்தை கடலுக்குள் போட்டு விட்டதையும் தெரிவித்தனர். ஆனால், அப்போது மாலை வேளை ஆகிவிட்டதால் விசாரணை தொடரவில்லை.

இதற்குப் பின்னர் நேற்று காலையில் இந்தியக் கடலோரக் காவற்படையின் உதவியுடன் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில் கடலடியில் போடப்பட்ட தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.

இந்த நடவடிக்கையில் வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட, பார் வடிவிலான, 14.568 கிலோ எடையுள்ள தங்கம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு 6,30,21,168 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.