கடந்த 15 வருட காலமாகப் புனரமைக்கப்படாத நிலையில் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட யாழ். கொக்குவில் பொற்பதி வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றது.
திருநெல்வேலிச் சந்தியையும், கொக்குவில் சந்தியையும் இணைக்கும் ஆடியபாதம் வீதியின் முக்கிய கிளை வீதியாகவுள்ள இந்த வீதியால் தினம் தோறும் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் பயணம் செய்வது வழமை.
சுமார் இரண்டரைக் கிலோ மீற்றர் நீளமுள்ள குறித்த வீதி கடுமையாகச் சேதமடைந்து காணப்பட்டமையால் இவ் வீதியால் போக்குவரத்துச் செய்யும் பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
வீதி சேதமடைந்திருந்தமையால் இவ் வீதியால் போக்குவரத்துச் செய்யும் வாகனங்கள் அடிக்கடி பழுதடைய வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் நீடித்து வந்தது.
இந்த நிலையில் கொக்குவில் பொற்பதி அறிவாலயத்தினர் வீதியின் நிலைமை தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து இந்த வீதியின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
வீதியின் புனரமைப்பு வேலைகளின் ஒரு பகுதியாக வீதி முன்னர் இருந்ததை விட அகலமாக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.