புதிய உழவர் சந்தை செயற்றிட்டம் நல்லூர் பிரதேச சபையால் அறிமுகம்

Report Print Thamilin Tholan in அபிவிருத்தி
32Shares

விவசாய உற்பத்திப் பொருட்களை விவசாயிகள் தாமாகவே நேரடியாக விற்பனை செய்வதற்கு, நல்லூர் பிரதேச சபையால் உழவர் சந்தை செயற்றிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட திருநெல்வேலி மற்றும் கொக்குவில் போன்ற பொதுச்சந்தைகளில் விவசாயிகள் தாமாகவே தங்களது விவசாய பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தும் வகையில் இந்த உழவர் சந்தை எனும் செயற்றிட்டம் நல்லூர் பிரதேச சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்றிட்டத்திற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து, நல்லூர் பிரதேச சபையால் கோரப்பட்டுள்ளன.

இது குறித்து நல்லூர் பிரதேசசபையின் செயலாளர் ரி.சுதர்ஷன் கருத்து தெரிவிக்கையில்,

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பொதுச் சந்தைகளில் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வது மிகவும் குறைவு.

இதன்காரணமாக உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்குமிடையில் காணப்படும் இடைத்தரகர்கள் மூலமாகவே விவசாய உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தக் கூடியதாகவுள்ளது.

பொதுச் சந்தைகளில் வியாபாரிகளால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் உற்பத்திப் பொருட்களுக்குக் கழிவு நடைமுறையை இல்லாமல் செய்வதற்கு நாங்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாலும் அதனையும் மீறிக் கழிவு நடைமுறை மறைமுகமாக இருந்து வருகிறது.

இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்களின் விவசாய உற்பத்திப் பொருட்களை நேரடியாகத் திருநெல்வேலிப் பொதுச் சந்தை மற்றும் கொக்குவில் பொதுச்சந்தை ஆகிய சந்தைகளில் விற்பனை செய்வதற்கேற்ற இட ஒதுக்கீட்டினை உழவர் சந்தை மூலமாக ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

விவசாயிகள் தங்களின் விவசாய உற்பத்திப் பொருட்களை நேரடியாகச் சந்தைகளில் விற்பனை செய்யும் நிலை உருவானால் படிப்படியாகக் கழிவு நடைமுறையை இல்லாமல் செய்து முற்றாகவே அந்த நடைமுறையை இல்லாமல் செய்வதற்கான சூழலை உருவாக்க முடியும்.

ஆகவே, யாழ்.குடாநாட்டின் விவசாயிகள் தங்கள் விவசாய உற்பத்திப் பொருட்களைக் கழிவு நடைமுறைகள் எதுவுமில்லாமல் நேரடியாக விற்பனை செய்வதற்கு நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வாய்ப்பைச் சரிவரப் பயன்படுத்தி நன்மையடைய வேண்டும்.

'உழவர் சந்தை' மூலம் நன்மை பெற்றுக் கொள்ள விரும்பும் விவசாயிகள் இந்த மாதம்-31 ஆம் திகதிக்கு முன்னர் நல்லூர் பிரதேச சபையின் தலைமைக் காரியாலயத்தில் உரிய விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments