நாட்டில் கடன் தொல்லையால் பாதிக்கப்படுவோருக்கு 2018 ஜனவரியில் இலகு கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சமாதானம் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்திற்கான தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று அம்பாறை மாவட்ட கரையோர அமைப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் இதை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
எனது ஆளுகைக்குள் வரும் வாழ்வாதார திட்டத்திற்குள் நலிவுற்ற மக்களுக்கு குறிப்பாக மீனவர்களுக்கு உதவுகின்ற ஏற்பாடு உள்ளது. இது வருட இறுதிப் பகுதியாதலால் பெரும்பாலான நிதிகள் முடிவுற்றுள்ளது.
பெரும்பாலான உதவிகள் கொடுத்து முடிக்கப்பட்டுள்ளன. மீதியாயிருக்கும் பொருட்களை இனி வழங்கமுடியாது. ஏனெனில் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள இந்தச் சூழலில் அவற்றை விநியோகிக்க வேண்டாமெனப் பணித்துள்ளேன்.
எனவே அடுத்த வருடம் தேவையான உதவிகளை உங்கள் அம்பாறை கரையோரப்பிரதேச மீனவர்களுக்கும் நலிவுற்ற மக்களுக்கும் செய்யலாம்.
அடுத்த வருட முற்பகுதியில் அப்பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்யவும் எண்ணியுள்ளேன். உங்கள் கோரிக்கைகள் நிச்சயம் கவனத்திலெடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.