யாழ். மக்களுக்கு கடல்நீரிலிருந்து குடிநீர்!

Report Print Aasim in அபிவிருத்தி

யாழ்ப்பாணம் மற்றும் கல்பிட்டிய பிரதேசங்களில் கடல்நீரைச் சுத்திகரித்து குடிநீராக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கல்பிட்டிய பிரதேச மக்கள் குடிநீருக்கு படும் அவதியை நிவர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதற்காக வெளிநாட்டு நிதியுதவி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்பிட்டிய பிரதேசத்தில் நிலத்தடி நீரில் கலந்துள்ள இரசாயனங்கள் காரணமாக அதை குடிநீராக பயன்படுத்த முடியாதுள்ளது. அதே நேரம் கடல் நீரைச் சுத்திகரித்து குடிநீராக்கும் செயற்பாட்டுக்கு ஏராளமான மின்சாரம் செலவாகும்.

இதன் காரணமாக கல்பிட்டிய பிரதேசத்தில் காற்றாடிகள் வழியாக மின்சார உற்பத்திக்கும் அதன் மூலம் கிடைக்கும் மேலதிக மின்சாரத்தைக் கொண்டு கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் நீர்வழங்கல் அமைச்சு தற்போதைக்கு ஜேர்மனிய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கல்பிட்டியில் அமைந்துள்ள கடற்படை முகாம் அருகில் கடல்நீரை குடிநீராக சுத்திகரிப்பதற்கான மையம் அமைக்கப்படவுள்ளது.

இதனையொத்த செயற்பாடுகளின் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க நீர்வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.