கிளிநொச்சியில் பெண் நோய் மருத்துவப் பிரிவினை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

Report Print Yathu in அபிவிருத்தி

கிளிநொச்சி மாவட்டத்தில் நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நவீன வசதிகளைக் கொண்ட பெண் நோய் மருத்துவப் பிரிவினை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மக்களின் மருத்துவத் தேவையையும் முல்லைத்தீவு மாவட்டத்தின மாந்தை கிழக்கு, துணுக்காய், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கான மருத்துவத் தேவையை வழங்கும் ஒரே ஒரு வைத்தியசாலையாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை காணப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த வைத்தியசாலையானது கடந்த 1997ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக சேதமடைந்த நிலையில் 2000ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து மீளவும் கிளிநொச்சி பழைய வைத்தியசாலை வளாகத்தில் இயங்க ஆரம்பித்தது.

இதனைத் தொடர்ந்து எதிர்கால நன்மை கருதியும், வைத்தியசாலையினுடைய தேவைப்பாடுகள் கருதியும் 2003ஆம் ஆண்டு, தற்போது வைத்தியசாலை அமைந்துள்ள வளாகத்தில் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வைத்தியசாலை செயற்பட்டு வருகின்றது.

கடந்த 2003ஆம் ஆண்டு மூன்று கட்டங்களாக வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும் முதற் கட்ட பணிகள் மாத்திமே பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தற்போது வைத்தியசாலையின் கட்டுமானத்தின் இரண்டாம் கட்டப்பணிகளை முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.

அத்துடன் அதிக தேவைகளை கொண்ட இந்த வைத்தியசாலையின் இரண்டாம் கட்டப்பணிகளை முன்னெடுக்க வேண்டிய தேவையிருப்பதாக பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நெதர்லாந்து அரசின் 950 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் வடமாகாண சுகாதார அமைச்சின் ஊடாக அமைக்கப்படவுள்ள பெண் நோயியல் மருத்துவப் பிரிவினை கிளிநொச்சி பொது வைத்தியசாலை வளாகத்தில் அமைப்பதற்கான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் குறித்த பிரிவினை வைத்தியசாலை காணியில் அமைப்பதா அல்லது வேறு இடத்தில் அமைப்பதா என்பது தொடர்பிலும், இது கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தியாக கருதப்படுமா என்பது தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் காணப்பட்டன.

இதனையடுத்தே, குறித்த கருத்துக்கள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் நேற்று மாலை 5 மணியளவில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன், வடமாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.