நுவரெலியா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு ஏற்படும் சிரமம்

Report Print T.Chandru in அபிவிருத்தி

நுவரெலியாவுக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தரும் வெளிநாட்டவர்களிடத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள் அதிகமான தொகையை அறவிடுவதாக மத்திய மாகாண சபை உறுப்பினரும் நுவரெலியா அபிவிருத்தி குழு இணைத்தலைவர்களில் ஒருவருமான பியசிரி கவரமான தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச செயலாளர் சுஜீவ போதிமான தலைமையில் நுவரெலியா பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு அபிவிருத்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

நுவரெலியா மாநகருக்கு சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு வரும் வெளிநாட்டவர்களினால் நகர அபிவிருத்திக்கு அதிகளவு பணம் மாநகரசபைக்கு கிடைக்கின்றது.

நுவரெலியா மாநகரம் சுற்றுலா பயணிகள் விரும்பத்தக்க நகரமாக காணப்படுவதால் இங்கு எழில் மிகுந்த இயற்கை இடங்களை பார்வையிட தொடர்ச்சியாக வருகைதரும் வெளிநாட்டவர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு வருகைதரும் வெளிநாட்டவர்கள் அசௌகரிகங்களுக்கு ஆளாகிவிடக்கூடாது என பியசிரி கவரமான குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் நுவரெலியா மாநகருக்கு அண்மையில் உள்ள லவர்சிலிப் இயற்கை நீர்வீழ்ச்சியை கண்டுகளிக்க முச்சக்கரவண்டிகளை வாடகைக்கு அமர்த்திச் செல்லும் வெளிநாட்டவர்களிடத்தில் அதிக தொகையை அறவிடுவதாக குற்றம் சுமத்தினார்.

நுவரெலியா பீற்று தோட்ட பகுதியை அண்மித்த லவர்சிலிப் நீர்வீழ்ச்சி பகுதிக்கு பொரலந்த சந்தியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் காணப்படுகின்றது.

இருந்தும் பொரலந்தை சந்தியில் இருந்து லவர்சிலிப் நீர்வீழ்ச்சி பகுதிக்கு முச்சக்கரவண்டியில் செல்ல வெளிநாட்டவர்களிடம் 1500 ரூபாய் அறவிடப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொகை அதிகமாகும் என்பதால் முச்சக்கரவண்டியில் பயணிக்கும் வெளிநாட்டவர்கள் போக்குவரத்து அசௌயரிகங்களுக்கு உள்ளாவதாக குறை தெரிவிக்கின்றனர்.

எனவே இதுதொடர்பில் நுவரெலியா மாநகர சபை தவிசாளர் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளையில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுப்பதாக நுவரெலியா மாநகர சபை தவிசாளர் சந்தனலால் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.