கம்பெரலிய திட்டத்தின் ஊடாக திருகோணமலையில் அபிவிருத்தி நடவடிக்கை!

Report Print Gokulan Gokulan in அபிவிருத்தி

கம்பெரலிய திட்டத்தின் மூலம் திருகோணமலையில் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பவுள்ளோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட “கம்பெரலிய” வேலைத்திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடு முழுவதும் இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த 80,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் குளங்கள் பல புனரமைக்கப்பட்டு அவை பராமரிக்கப்படவுள்ளன.

அத்துடன் கடந்த ஆட்சிபோல் அல்லாமல் இதன் ஒப்பந்தம், குளத்தை புனரமைக்கும் போது கிடைக்கும் மண் போன்றன விவசாய சங்கங்களுக்கே வழங்கப்படவுள்ளன.

மேலும் கிராமிய வீதிகள் புனரமைப்பு, கிராமப்புற பாடசாலைகளுக்கு குடிநீர், கழிப்பறை வசதி, பாடசாலை மைதானங்கள் புனரமைப்பு, மின்சாரமற்ற வீடுகளுக்கு மின்சார இணைப்பு மற்றும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வாழ்வாதார உதவி என பல திட்டங்கள் இதன்மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் எமது திருகோணமலை மாவட்ட கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

இந்த நிதியின் மூலம் மேலே கூறிய பல அபிவிருத்தி திட்டங்களை பிரதமரின் வழிகாட்டலில் மிக விரைவில் திருகோணமலை மாவட்டம் முழுவதும் ஆரம்பிக்கவுள்ளேன்” என தெரிவித்தார்.