21ஆம் நூற்றாண்டில் நாட்டின் பாரிய அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு

Report Print Shalini in அபிவிருத்தி

21ஆம் நூற்றாண்டில் எமது நாட்டின் நீர்ப்பாசன புரட்சியாக குறிப்பிடப்படும் மொரகஹகந்த – களுகங்கை பாரிய அபிவிருத்தி திட்டத்தின் களுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பல் விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மொரகஹகந்த திட்டத்தின் இரண்டாவது நீர்த்தேக்கமான களுகங்கை நீர்த்தேக்கம், மாத்தளை மாவட்டத்தின் தும்பர பள்ளத்தாக்கின் நக்கிள்ஸ் மலையடிவாரத்தில் களுபஹன பிரதேசத்தில் ஊற்றெடுக்கும் களுகங்கையை லக்கல – பல்லேகம பிரதேசத்தில் இடைமறித்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்க் கொள்ளளவு 248 மில்லியன் கனமீற்றர்களாகும். அதாவது 200,880 ஏக்கர் அடிகளாகும். இதன் பிரதான அணைக்கட்டு 618 மீற்றர் நீளமும் 68 மீற்றர் உயரமும் உடையது.

அணைக்கட்டின் மேற்பரப்பின் உச்சியின் அகலம் 08 மீற்றர்களாகும். நீர்த்தேக்கத்திற்கு வலது புறமாக நிர்மாணிக்கப்படும் கருங்கல் அணைக்கட்டு 719 மீற்றர் நீளமும் 28 மீற்றர் உயரமும் உடையது. இந்நீர்த்தேக்கம் 14.5 சதுர கிலோமீற்றர் பரப்பை கொண்டுள்ளதுடன், 128 சதுர கிலோமீற்றர் பிரதேசம் இதனால் போஷிக்கப்படுகின்றது.

களுகங்கை பிரதேசத்தில் மீளக் குடியமர்த்தப்படும் 3,000 குடும்பங்களுக்கு களுகங்கை நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விநியோகிக்கப்படுவதுடன், பழைய ஹத்தொட வாவியிலிருந்து நீரைப் பெற்று விவசாயம் மேற்கொள்ளப்பட்ட சுமார் 2,000 ஏக்கரில் தொடர்ச்சியாக பயிர்ச்செய்கை செய்வதற்கு தேவையான நீர் வழங்கப்பட்டதன் பின்னர் எஞ்சிய நீரை மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Latest Offers