செங்கலடியில் அபிவிருத்தி திட்டம்

Report Print Krishna in அபிவிருத்தி

மட்டக்களப்பு - செங்கலடி நகரை அபிவிருத்தி செய்யும் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

செங்கலடி நகரில் அமைந்துள்ள பொதுச்சந்தை பழமையடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதினால் இது தொடர்பாக அமைச்சர் மனோகணேசனின் கவனத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கொண்டு சென்றதையடுத்து குறித்த சந்தையினை நவீன வசதிகளுடன் அமைப்பதற்கு இரண்டு கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தை தொகுதியை அமைப்பது தொடர்பாகவும், செங்கலடி நகரில் பஸ் நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பாகவும், செங்கலடி நகர்ப்பகுதியில் எதிர்நோக்கப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

நகரில் பல வியாபார நிலையங்கள் பொதுச்சந்தை என்பன உள்ள போதிலும் குடிநீரை பெறுவதிலும் இயற்கை கடன்களை மேற்கொள்வதற்கும் நகருக்கு வருவோர் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அவற்றினை நிவர்த்திசெய்வது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.

செங்கலடி நகரினை அபிவிருத்திசெய்யும் வகையில் நகரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையான திட்டங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச சபைக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பி.புண்ணியமூர்த்தி, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர், செயலாளர் மற்றும் செங்கலடி நகர வர்த்தக சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.