மலையக மக்களின் இருட்டறை வாழ்வுக்கு முற்றுப் புள்ளி

Report Print Thirumal Thirumal in அபிவிருத்தி

அமைச்சர் திகாம்பரத்தினால் மலையகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற தனி வீட்டுத்திட்டமானது மலையகத் தமிழ் மக்களின் இருட்டறை வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைக்கத் தொடங்கியுள்ளது என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

தனி வீடமைப்பு திட்டத்தில் வீடுகளுக்கான திறப்புகளை இன்றைய தினம் வழங்கி வைத்து உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஹட்டன் பிரதேசத்திலுள்ள பின் தங்கிய பிரதேசங்களில் புளோரன்ஸ் தோட்டமும் ஒன்றாகும்.

இந்தத் தோட்டத்தில் உரிய வீடுகள் இன்றி பல குடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு அமைச்சர் திகாம்பரம் முதற்கட்டமாக இந்த தோட்டத்துக்கு 10 வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளார்.

இன்று முதல் உங்கள் இருட்டறை வாழ்வுக்கு விமோசனம் கிடைத்துள்ளது, நிலத்துக்கும் வீட்டுக்கும் உரிமையுள்ள குடும்பத்தினராக மாறியுள்ளீர்கள்.

சொந்த நிலத்தையும் சொந்த வீட்டையும் பெற்று வருகின்ற எமது மக்கள் இனிமேல் தோட்ட நிருவாகத்தை நம்பியிருக்க வேண்டியதில்லை, சுயமாக செயற்பட்டு தமது வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் செனன் வட்டார அமைப்பாளர் விஜேந்திரன், ஹட்டன் - டிக்கோயா நகரசபை உறுப்பினர் திருமதி ராமேஸ்வரி, ஹட்டன் ட்ரஸ்ட் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு உத்தியோகஸ்தர் மஞ்சுளா, தோட்ட வெளிக்கள உத்தியோகஸ்தர் உட்பட வீடமைப்பு திட்டத்தின் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் எபோட்ஸிலி புளோரன்ஸ் தோட்டத்தில் 10 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த வீட்டின் உரிமையாளர்களுக்கான சாவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.