டிசம்பர் மாதத்திற்குள் அபிவிருத்தி பணிகளை பூர்த்தி செய்யுங்கள்

Report Print Kumar in அபிவிருத்தி

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அரசமொழிகள் அமைச்சு மூலம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யும் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டம் நேற்று மாலை தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அரசமொழிகள் அமைச்சர் மனோகணேசன் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அரசமொழிகள் அமைச்சு மூலம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக 463 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளதுடன் அந்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது, மூன்று மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளும் தீர்த்துவைக்கப்பட்டன.

குறித்த அபிவிருத்தி பணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பூர்த்திசெய்யுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரைகளை வழங்கினார்.

கடந்த காலத்தில் வடகிழக்கு மாகாணசபைக்காக தான் போராடியதாகவும் இன்று அந்த மாகாணசபைகள் தேவைதானா என்று தோன்றுமளவுக்கு செயற்பாடுகள் உள்ளதாகவும் அமைச்சர் மனோகணேசன் இங்கு கவலை தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அரசமொழிகள் பிரதியமைச்சர் அலிசாகீர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், அமைச்சின் செயலாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.

Latest Offers