சம்பள பேச்சு வார்த்தையில் அரசாங்கத்திற்கும் கம்பனிக்கும் பேச்சுவார்த்தை கிடையாது இது முழுக்க முழுக்க தொழிற்சங்கத்துடன் தொடர்புடையது என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சழுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அக்கரபத்தனை, பச்சை பங்களா தோட்ட மக்கள் கடந்த சில வருட காலமாக கூரை தகரங்கள் மாற்றப்படாததால் மழை காலங்களில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்.
தொடர் குடியிருப்புக்களின் நிலைமை தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த பின் அதனை மாற்றுவதற்காக 800 தகரங்கள் அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பழனி திகாம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இன்று பெற்றோல் விலை அதிகரித்துள்ளது. டீசல் விலை அதிகரித்துள்ளது. அரச அலுவலர்களின் சம்பளம் அதிரித்துள்ளது. ஆனால், தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் மாத்திரம் அதே நிலையில் தான் காணப்படுகின்றது.
இந்த சம்பள பேச்சு வார்த்தை அரசாங்கத்திற்கும் கம்பனிக்கும் சம்மந்தமான பேச்சுவார்த்தை அல்ல. இது முழுக்க முழுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸிக்கும், தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்திற்கும் மற்றும் கூட்டுகமிட்டி தொழிற்சங்கத்துக்கும் இடையிலான பேச்சு வார்த்தையே ஆகும்.
ஆகவே, நான் அதில் தலையிட முடியாது. எனவே தான் அதற்கு அழுத்தத்தை கொடுத்து வருகின்றோம்.
ஆனால் இன்று சொல்கிறார்கள் அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும் என்று, அவர்கள் அமைச்சு பதவியில் இருக்கும் போது விலகினார்களா? ஆனால் உங்களுக்காக எப்போது வேண்டும் ஆனாலும் விலகவும் தயார்.
என்னுடைய கனவு ஏனைய சமூகங்கள் எவ்வாறு வாழ்கிறார்களோ, அதே போன்று மலையக மக்களும் இணையாக வாழ வேண்டும் என்பதே. எனவே நான் எந்த கட்சி வேறுபாடுமின்றி அனைவருக்கும் வீடுகளையும் காணிகளையும் ஏனைய அனைத்தினையும் செய்து வருகின்றேன்.
நான் கட்சி பார்த்து ஒரு போதும் வேலை செய்பவன் அல்ல. எமது மக்களுக்கு என்னென்ன தேவை என்று என்னை நம்பினால் நிச்சம் பெற்றுக்கொடுப்பேன்.
உங்களுடைய வீட்டுத்தேவை மற்றும் காணித்தேவை ஆகிய அனைத்தும் எதிர்காலத்தில் பூர்த்தி செய்து கொடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.