யுத்தத்தினால் இழப்புக்களை சந்தித்தோருக்கு இழப்பீடு வழங்கி வைப்பு

Report Print Yathu in அபிவிருத்தி

கிளிநொச்சியில், யுத்தத்தினால் இழப்புக்களை சந்தித்தோருக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு கிளிநொச்சி, கூட்டுறவு சபை மண்டபத்தில் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில் 30 மில்லியன் பெறுமதியான தொகை 334 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், யுத்தத்தினால் உயிரிழந்தோர், அங்கவீனர்கள், சொத்துக்களை இழந்தோர் மற்றும் சேதமாகிய வழிபாட்டு ஸ்தலங்கள் உள்ளிட்டவற்றிற்கு குறித்த இழப்பீடுகள் இன்று ஒரு கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன் போது இந்த ஆட்சி தொடர்ந்தும் நீடிக்கும் என்பது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“கடந்த 3 வருடங்களாக வீட்டுத்திட்டங்கள் வழங்குவதில் இழுபறி நிலை காணப்பட்டது. அவ்வாறு இழுபறியுடனேயே காலங்கள் கடத்தப்பட்டன.

விஞ்ஞான அமைச்சு என கூறிக்கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதியினால் உரிய முறையில் அமைச்சுக்களை தானாக தீர்மானித்து வழங்க முடிந்திருக்கவில்லை.

இன்று பொருத்தமான வகையில் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் வீட்டுத்திட்டங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 11,000 மேற்பட்ட சமூர்த்தி பயனாளிகளுக்கு சமூர்த்தி வழங்கப்படவில்லை. அவர்களையும் சமூர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்து அடுத்த வருட ஆரம்பத்திற்குள் அவர்களுக்கு சமூர்த்தி வழங்கப்படும்.

நீர் நிலைகளில் இப்போது நீர் அதிகரித்து வருகின்றது. வடக்கில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு பல்வேறு திட்டங்கள் எம்மிடம் உள்ளது.

பொருத்தமான வகையில் நாம் திட்டங்களை எவருக்கும் பாதிப்பு இல்லாது கொண்டு செல்வோம். புதிய குடியேற்றங்கள் இல்லாமல் மகாவலி திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

எமது வசம் உள்ள வளங்களை ஏனையவர்களிற்கும் பகிர்ந்தளிக்க நாம் முன்வர வேண்டும். இங்கு உள்ளவர்களை பட்டினி போட்டோ, நீர் இல்லாமலோ நாம் அடுத்த மாவட்டத்திற்கு எந்த வளத்தையும் கொண்டு செல்ல போவதில்லை. சிலரது சுயநல அரசியலிற்காக மக்கள் அவர்களிற்கு ஒத்திசைக்க கூடாது.

வடக்கு மாகாண சபையில் நிதி இல்லை என்றால் நிதி மோசடி குற்றச்சாட்டு எவ்வாறு வந்தது? அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்றால் அதிகார துஷ்பிரயோகம் எவ்வாறு வந்தது?

இவ்வாறு மாகாண சபையை வீணாக கழித்து விட்டனர். மாகாண சபையால் மக்களிற்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. அண்மையில் சம்பந்தன் மாகாண சபையால் பலவற்றை சாதித்திருக்கலாம் என்ற கருத்தை குறிப்பிட்டார்.

மாகாண சபை கலைந்த பின்னர் அவர் அவ்வாறு கருத்து கூறியுள்ளார் எனவும் குறிப்பிட்டார். வடக்கு மக்களின் வறுமை நிலையை போக்குவதற்கு பல்வேறு திட்டங்கள் உள்ளது” எனவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது காதர் மஸ்தான் கருத்து தெரிவிக்கையில்,

“இப்போது தான் விஞ்ஞான அமைச்சு பொருத்தமான பகுதிக்கு கிடைத்துள்ளது.

இங்கு உள்ளவர்களுக்கு தான் மீள்குடியேற்றம் உள்ளிட்டவற்றிற்கு பொருத்தமான அமைச்சு கிடைத்திருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் எவ்வித நன்மையும் குறித்த அமைச்சினால் கிடைத்திருக்கவில்லை. இன்று பலர் இந்த அரசு நிற்காது. கவிழ்க்கப்படும் என்றெல்லாம் கூறுகின்றனர்.

ஆனால், அது நடக்காது. இந்த அரசு நீடிக்கும். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கை பலப்படுத்தப்பட்டு அரசு தொடரந்தும் செயற்படும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers