வடக்கில் அதி முக்கியத்துவம் பெறும் இரணைமடு குளம்!

Report Print Suman Suman in அபிவிருத்தி

கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபிவிருத்திக்கு பின்னரான இரணைமடுகுளத்தின் வான்கதவினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

இரணைமடுவுக்கு இன்று முற்பகல் 10.30 மணியளவில் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட குளத்தின் பெயர் கல்வெட்டினை திறந்து வைத்துள்ளார்.

குறித்த குளமானது வடமாகணத்தில் அதி முக்கியத்துவம்பெறும் குளமாக கருப்படுகின்றது.

யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில், மக்களின் அதி முக்கியத் தேவைகளை கருத்திற்கொண்டு அபிவிருத்தியை கருத்திற்கொண்டு இந்த குளம் மீள் புனரமைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அவர்களின் சீவனோபாய தொழிலான விவசாயத்தை தடையின்றி மேற்கொள்வதற்கும் இந்த இரணைமடு குளம் பாரிய பங்களிப்பினைச் செலுத்தும் என எதிர்ப்பார்க்கப்டுகின்றது.

இதன் போது, இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகனிடம் இரணைமடுகுளத்தின் ஆவணத்தையும் கையளித்துள்ளார்.

மேலும் விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்ட பொங்கல் நிகழ்வையும் அரிசியிட்டு ஆரம்பித்து வைத்தார்.

இரணைமடுகுளத்தின் தற்போதைய நீர் மட்டம் 36 அடியை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஒரு வான்கதவினை ஆறு இஞ்ச் அளவில் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.

இரணைமடுகுளம் இதுவரை காலமும் 34 அடியாக காணப்பட்டது. தற்போது அபிவிருத்திக்கு பின் 36 அடியாக காணப்படுகிறது.

இதுவரை காலமும் 106,500 ஏக்கர் அடியாக (131 எம்சிஎம்) காணப்பட்ட நீர் கொள்ளளவு தற்போது 119,500 ஏக்கர் அடியாக (147 எம்சிஎம்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் 8500 ஏக்கர் பரப்பளவில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இனிவரும் காலங்களில் 12,500 ஏக்கரில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, முன்னாள் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Latest Offers