கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கு கொள்கையளவில் இணக்கம் - சிறீதரன்

Report Print Yathu in அபிவிருத்தி

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தில் செயலிழந்து காணப்படுகின்ற பரந்தன் இரசாயன தொழிற்சாலை மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளம் ஆகியவற்றை மீள இயக்குவதற்கும் சுமார் 350 ஏக்கர் நிலப்பரப்பில் கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைப்பதற்கும் கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த இரசாயனத் தொழிற்சாலை மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளம் என்பன யுத்தத்தினால் சேதமடைந்து இதுவரை மீள இயங்காத நிலை காணப்படுவதோடு இதில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக் கூடிய நூற்றுக்கணக்கானோர் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர்.

இது தொடர்பாக நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் போது, இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அதாவது, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளம் ஆகியவற்றை மீள இயங்க வைப்பதற்கும், பரந்தன் பகுதியில் 350 ஏக்கர் நிலப்பரப்பில் 20 நிறுவனங்களைக் கொண்ட நான்கு மாவட்டங்களை மையப்படுத்திய வகையில் ஒரு கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைப்பதற்கும் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் 1000ற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கக் கூடிய சூழல் உருவாகும் என்றும், வட்டக்கச்சி விவசாயப் பண்ணை தொடர்பில் இந்த டிசம்பர் மாதத்திற்குள் ஒரு தீர்வைத் தரக்கூடியதாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்புக்களையும், பெற்றுக்கொடுக்க முடியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.