மகிந்தவின் கனவுத் திட்ட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியாவுக்கு இணக்கம்?

Report Print S.P. Thas S.P. Thas in அபிவிருத்தி

மகிந்த ராஜபக்சவின் கனவுத் திட்டமாக காணப்பட்ட மத்தல விமான நிலையத்தின் அபிவிருத்திக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய விமான நிலைய அதிகார சபையுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு இலங்கை அமைச்சரவை சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மத்தல விமான நிலையத்தை இயக்குவதற்காக இந்திய விமான நிலைய அதிகார சபை முன்வைத்த யோசனையை நடைமுறைப்படுத்தல் என்ற தலைப்பிலான, அமைச்சரவைப் பத்திரம் கடந்த புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள் மங்கள சமரவீர, அர்ஜூன ரணதுங்க ஆகியோர் இணைந்து இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தனர்.

இதற்கமைய, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுக்களை நடத்துவதற்கான குழு, அரசாங்கத்தின் சார்பில், இந்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் முறைப்படியான பேச்சுக்களை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுக்களின் மூலம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்பாடு இறுதி செய்யப்படவுள்ளது. இந்நிலையில் அமைச்சரவையின் சாதகமான பதில் கிடைத்திருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், மத்தல விமான நிலையத்தை இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையுடன் இணைந்து செயற்படுத்துவதற்கான இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான முறைப்படியான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கே, அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Latest Offers