2025ஆம் ஆண்டில் இலங்கை....! பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Murali Murali in அபிவிருத்தி

2025ஆம் ஆண்டாகும்போது இலங்கையை முழுமையாக முன்னேற்றுவோம். எமது நாட்டுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களை வெளிநாடுகளுக்கு இனிமேல் வழங்கப்போவதில்லையென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இம்மாத இறுதியில் பாரிய கைத்தொழிற் பேட்டையொன்று ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இரண்டு மாத இறுதியில் திருகோணமலையில் வர்த்தக வலயமொன்றும் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

நாடாளுமன்றில இடம்பெற்ற வரவு செலவு திட்டம் குறித்த குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை. கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாகவே முதலீட்டார்கள் தமது முதலீடுகளை மீளப்பெற்று வருகின்றனர்.

எனினும், தற்போதைய சூழலில் பங்குச் சந்தை படிப்படியாக பலமடைந்து வருகிறது. பங்குச் சந்தையில் முதலிடுமாறு ஊழியர் சேமலாப நிதியத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

இருந்தபோதும் கடந்த முறை ஏற்பட்டது போன்ற நிலைமை ஏற்படாது பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அவர்கள் யோசிக்கின்றனர். இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரமும், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கமும் இருவேறு விடயங்களாகும்.

கடன்சுமை அதிகரித்தபோது பங்குச்சந்தை அதிகரித்திருந்தது. தற்பொழுது நாட்டின் பங்குச் சந்தை படிப்படியாகப் பலமடைந்து வருகிறது. மகிந்தவின் ஆட்சிக்காலம்தான் எமது நாட்டின் சொர்க்கபுரியாகவிருந்தது என பந்துல குணவர்த்தன கூறியிருந்தார்.

ஆனால் 2004ஆம் ஆண்டு தைத்த ஆடைகள் மற்றும் கைத்தறி மூலம் 2800 மில்லியன் டொலர்கள் வருமானம் நாட்டுக்குக் கிடைத்தது. இது 2015இல் 4600 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்தது.

ஆனால் வியட்னாம் 2004ல் 4900 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியதுடன் 2015ல் 27,500 மில்லியன் டொலர்களாக அதிகரித்தது. அதேபோன்று பங்களாதேஷ் 2004ல் 5700 மில்லியன் டொலரை வருமானமாகப் பெற்றதோடு, 2105ல் இதனை 25,500 மில்லியன் டொலர்களாக அதிகரித்துக் கொண்டது.

பிங்கிரியவில் பாரிய கைத்தொழில் பேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இங்கு முதலீடு செய்ய 300 முதலீட்டாளர்கள் இதுவரை முன்வந்துள்ளனர்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.