யாழ். மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வடக்கு ஆளுநர்

Report Print Suthanthiran Suthanthiran in அபிவிருத்தி

யாழ். குடாநாட்டின் நீர்த் தேவையை பூா்த்தி செய்வதற்கு வடமராட்சி களப்பில் இருந்து நீரை எடுப்பதற்கான பாரிய திட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இது யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆளுநர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் ஆறுகள், நதிகள் இல்லாத ஒரு மாவட்டம் யாழ்.மாவட்டம். இங்கு நிலத்தடி நீர் வற்றல் அல்லது மாசு காரணமாக நீர்த் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் நீர் இல்லாமை என்பதற்கும் அப்பால் சுகாதார பிரச்சினைகளும் தலைதுாக்கியுள்ளது. இந்நிலையில் யாழ்.குடாநாட்டுக்கு சுத்தமான நீரை கொண்டுவருவதில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்.

அதில் வடமராட்சி களப்பில் தேங்கும் மழை நீரை வெளியில் எடுத்து பாரிய குளம் ஒன்றில் அதனை தேக்கி பின்னர் அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை மக்களுக்கு கொடுப்பதே இந்த திட்டம். இதற்கான சகல பணிகளும் நிறைவடைந்து விட்டன.

இந்த திட்டத்திற்கான பணமும் எடுக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றது. தற்போது இந்த திட்டத்தினால் சுற்றுச் சூழலுக்கு உண்டாகும் சாதக பாதகங்கள் தொடா்பாக யாழ்.பல்கலைக்கழக சமூகத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த ஆய்வுகள் பெரியளவில் பாதகமாக அமையாத நிலையில் மிக விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும். இதற்காக வடமராட்சி களப்பில் தேக்கப்பட்டிருக்கும் நீரில் 18 சதவீதமான நீரை வெளியில் எடுத்து அதனை குளம் ஒன்றில் சேமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த குளம் சுமார் 9 கிலோ மீற்றர் சுற்றுளவை கொண்டதாகவும், சுற்று மதில் கொண்டதாகவும் அமைக்கப்படும். அங்கிருந்து பின்னர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

இந்த திட்டத்திற்காக அமைக்கப்படும் குளம், யாழ்.மாவட்டத்தில் அமையும் முதலாவது மிகப்பெரிய குளமாக அமையும். மேலும் இந்த குளத்தின் ஊடாக நிலத்தடி நீர்மட்டமும் உயர்வடையும் சாத்தியங்கள் உள்ளன.

இதற்கும் மேலதிகமாக 5 நீர் வழங்கல் திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன. அதாவது மேம்படுத்தப்பட்ட ஆறுமுகம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

அதற்காக 65 வீதமான நிதியை பெற்றிருக்கிறோம். மிகுதி 35 வீதமான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பெறுவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.

அதே போல் பாலி ஆறு திட்டம், மேல் பறங்கியாறு, கீழ் பறங்கியாறு திட்டம் மற்றும் மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம் ஆகியவற்றிலிருந்து நிலத்தடி குழாய்கள் ஊடாக நீரை கொண்டுவரும் திட்டம் ஆகியன இருக்கின்றன.

இவை தொடா்பாக ஆய்வுகளையும் நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். இவற்றுக்கு அப்பாலேயே இரணைமடு திட்டம் தொடா்பாக நாங்கள் சிந்திப்போம்.

அங்கே அரசியல் விடயங்கள் மற்றும் மக்களிடம் பயங்கள் இருக்கின்றன. ஆகவே அவற்றுக்குள் தலைப்போட நாம் விரும்பவில்லை.

ஆனபோதும் அந்த மக்களுடன் நாம் தொடா்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக இரணைமடு குளத்திலிருந்து கடலுக்கு செல்லும் தண்ணீரை பணம் கொடுத்து வாங்குவதற்கு நாம் தயார்.

அந்த பணம் கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரித்துடையாதாக இருக்கட்டும். காரணம் இன்று போத்தல் தண்ணீரை பெருமளவு பணம் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.

அந்த நிலை இல்லாமல் இரணைமடு விவசாயிகளுக்கு பணம் கொடுத்து வாங்குவதற்கு நாம் தயார். நாளையும் கூட விவசாயிகள் தயாராக இருந்தால் நாளைக்கும் நாங்கள் அதனை செய்யலாம்” என கூறியுள்ளார்.

Latest Offers