மட்டக்களப்பு மாநகரை நவீன தொழிநுட்பத்துடன் கூடிய மாநகரமாக உருவாக்கும் திட்டம்

Report Print Kumar in அபிவிருத்தி

நவீன தொழிநுட்பத்துடன் கூடிய மாநகரை உருவாக்கும் நோக்கோடு மட்டக்களப்பு மாநகரினுள் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்களின் மீளாய்வுக் கூட்டமானது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இன்று மாநகர குழு மண்டபத்தில் இடம்பெற்றது.

டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் அஜித் பி.பெரேரா அவர்களின் பிரசன்னத்தில், மாநகர முதல்வரின் ஆயிரம் நாள் செயற்றிட்டத்தின் கீழ் நவீன தொழிநுட்பத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கோடும், புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்றிட்டங்கள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் தற்கொலைகளுக்கு தீர்வாக நவீன தகவல் தொழிநுட்பத்தின் ஊடாக நம்பகமான உளவள ஆலோசனைகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள வலைத்தளம் தொடர்பாகவும், அடிக்கடி தற்கொலைகள் இடம்பெறும் கல்லடிப் பாலம் போன்ற இடங்களை முழுமையான டிஜிட்டல் உட்கட்டமைப்புடன் கண்காணித்து முன் ஆயத்த எச்சரிக்கைகளை மேற்கொள்வதற்காக நிறுவப்பட்டுள்ள வடிவமைப்புகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் நவீன தொழிநுட்பத்துடன் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள், மற்றும் இணையத்தளத்தின் ஊடான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளில் மட்டக்களப்பில் உள்ள தகவல் தொழிநுட்ப துறைசார் வல்லுனர்களுடன் மாநகர முதல்வர் மேற்கொண்டு வரும் பணிகள் தொடர்பிலும் அமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குள் காணப்படும் பிரச்சனைகளை மாநகர முதல்வரிடம் தெரியப்படுத்தி அவற்றுக்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான முதல்வரிடம் சொல்லுங்கள் வலைத்தளத்தின் செயற்பாடுகள், மற்றும் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை மட்டக்களப்பு மாநகர சபையானது மேற்கொண்டு வருவதைப்போல் ஏனைய உள்ளுராட்சி மன்றங்களும் மேற்கொள்ளுமாகயிருந்தால் இந்த நாட்டினை தகவல் தொழிநுட்ப ரீதியாக வளர்ச்சியடைந்த நாடாக அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டியதோடு மேற்படித் திட்டங்களுக்கு தமது அமைச்சின் பூரண ஆதரவும் நிதியுதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

அத்துடன் மட்டக்களப்பு மாநகரினை தகவல் தொழிநுட்ப மத்திய நிலையமாக உருவாக்கி கிழக்கில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவும் தான் துணைநிற்பதாகவும் கூறினார்.

இம் மீளாய்வுக் கூட்டத்தில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் சிரேஷ்ட பிரதிச் செயலாளர் வருண தணபால, தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தின் வளவாளர் இந்திக்க சொய்சா மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.