பலாலி போன்று மட்டக்களப்பு விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும்: பிரதமர் ரணில்

Report Print Steephen Steephen in அபிவிருத்தி

வருட இறுதிக்குள் இந்தியாவுக்கும் பலாலிக்கும் இடையில் விமான சேவைகளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - மூதூர் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற அபிவிருத்தித் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

இந்த பிரதேசத்தில் பாரிய அவிவிருத்தி ஏற்படும். அது மாத்திரமல்ல, சுற்றுலாப் பயணிகளை இந்த பகுதிகளுக்கு கொண்டு வருவதற்காக மட்டக்களப்பு மற்றும் பலாலி ஆகிய இரண்டு விமான நிலையங்களையும் நாங்கள் புனரமைக்க உள்ளோம்.

இந்தியாவிற்கு விமான போக்குவரத்தை மேற்கொள்ளும் வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் பலாலிக்கு இந்திய விமானங்கள் வரும். இதன் பின்னர் மட்டக்களப்பு விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டதும் இந்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

நாங்கள் இந்த நாட்டை பொறுப்பேற்கும் போது நாட்டுக்கு ஜீ.எஸ்.பிளஸ் வரிச்சலுகை கிடைக்கவில்லை. நல்லிணக்கம் இருக்கவில்லை. பொருளாதாரம் சிறப்பாக இருக்கவில்லை. எவரும் எமக்கு கடன் தர முன்வரவில்லை. தற்போது சிரமப்பட்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளோம். நாட்டின் வருமானத்தை அதிகரித்துள்ளோம். வரிகளை அறவிடுகிறோம் என எம்மை திட்டினர்.

ஏச்சு பேச்சுகளை வாங்கிக்கொண்டு வேலை செய்தோம். வீதிகளை புனரமைக்கவும் கிராமங்களை, கிராம புரட்சியை செய்ய தற்போது பணம் இருக்கின்றது. இவற்றை செய்யாதிருந்தால்?. வேலைகளை செய்யவே ஆட்சியை பொறுப்பேற்கின்றோம். திட்டு வாங்கிக்கொண்டாவது வேலை செய்ய வேண்டும். தற்போது அதன் பிரதிபலன்கள் கிடைத்து வருகின்றன எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூரில் இருந்து வெருகல் வரையான 30 கிலோ மீற்றர் வீதியை தார் கம்பளமிட்டு அபிவிருத்தி செய்யும் திட்டம் நேற்று மாலை பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.