இலங்கை, கொரியா இடையிலான நல் உறவினால் உண்டாகும் நன்மை இதுவே!

Report Print Malar in அபிவிருத்தி

இலங்கை மற்றும் கொரியா இடையிலான நல் உறவின் காரணமாக சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திகள் பல இந்நாட்டிற்கு கிடைக்கப் பெறுவதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

கொழும்பு - ஷங்கரில்லா ஹோட்டலில் நேற்று கொரியாவின் தேசிய தின நிகழ்வினை முன்னிட்டு நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

கொரியா மற்றும் இலங்கை இடையே மிக நெருங்கிய உறவு காணப்படுகின்றது. இவ்வுறவானது இரு நாடுகளிடையேயான கௌரவம், விசுவாசம் மற்றும் நட்புறவை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

இந்த ஆழமான உறவிற்கு பல நூறு ஆண்டுகளாக இரு நாடுகளிடையே பரவியுள்ள பௌத்த மதமும் பெரும் துணை புரிந்துள்ளது.

1977ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி இரு நாடுகளிடையேயான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறுப்பட்ட துறைகளிலும் தொடர்கின்றது.

இரு நாடுகளிடையே நெருங்கிய பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். இதன்மூலம் பூகோளவியல் முக்கியத்துவத்தை ஒன்றுப்படுத்தல், அறிவுச் சார் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், சுங்க திணைக்களத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொடுத்தல், தொழில்நுட்ப பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு புதிய வழிமுறைகளை உருவாக்குதல், திறந்த பொருளாதார முறை, முதலீட்டு மற்றும் சுற்றுலா துறைகளை அபிவிருத்திச் செய்வதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.