மட்டக்களப்பு விமான நிலையத்தை தரமுயர்த்த பிரதமர் ரணில் தீர்மானம்

Report Print Kumar in அபிவிருத்தி

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தல் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு - புதுநகரிலுள்ள விமான நிலையத்தில் இன்று மதியம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரியந்த காரிய பெரம ஆகியோர் தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து நேரடியாக இந்திய சுற்றுலாத் தளங்களை காணும் நோக்குடன் இங்கிருந்தும் மற்றும் பலாலி மத்தள விமான நிலையங்கள் ஊடாகவும், எதிர்வரும் காலங்களில் சர்வதேச சேவைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் இதன்போது விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் அதற்குத் தேவையான கட்டுமானப் பணிகளை ஆரம்பித்தல் சம்பந்தமாகவும் பிரதமர் தேவையான பணிப்புரைகளை விடுத்திருந்தார்.

இதேவேளை, பிரதமர் விமான நிலையத்தின் ஓடுபாதைகளை சுற்றிப் பார்வையிட்டுள்ளார். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத் துறையையும், பொருளாதார அபிவிருத்தியையும் உயர்த்தும் நோக்குடன் இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் எம்.உதயகுமார், பிரதம அலுவலக உயர் அதிகாரிகள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய உயர் அதிகாரிகள், மட்டு விமான நிலைய உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட சற்றுலாத்துறை விடுதி முகாமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.