இலங்கையில் திரவப் பாலுக்கான உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய பொது, தனியார் துறைகள் மற்றும் சிறுதொழில் விவசாயிகளுடன் இணைந்து குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விரைவாக அடைவதற்கு புல் சாகுபடி, கறவை மாடு வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன சேவைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது கால்நடை பண்ணை மேம்பாடு, பால் மற்றும் முட்டை தொடர்பான தொழில்துறை அமைச்சகத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
நாட்டின் வருடாந்த திரவ பால் தேவையில் 40 வீதத்துக்கும் குறைவானவையே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதன் விளைவாக, சத்தான புதிய திரவப் பாலை உட்கொள்ளும் வாய்ப்பை மக்கள் இழக்கின்றனர் என்பது இந்த கலந்துரையாடலின்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை திரவப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் 15 பெருந்தோட்ட நிறுவனங்களின் உதவியுடன் 15,000 கறவை மாடுகளை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே தெரிவித்தார்.
இதற்கிடையில் முட்டை, கோழி மற்றும் தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் 2020ம் ஆண்டில் 16 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி வருவாயை எதிர்பார்ப்பதாக இந்தக்கலந்துரையாடலில் பங்கேற்ற தனியார் துறையின் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.