திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தின் பிரதான வீதி அகலமாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலை அமைச்சின் வரவு செலவு திட்டக்குழு நிலை விவாதத்தில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கிண்ணியா பிரதேசத்தின் பிரதான வீதி அகலமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அப்பிரதேச மக்களால் பல வருடகாலமாக முன்வைக்கப்படுகிறது.
அப்பிரதேசத்தின் சனத்தொகைக்கும், போக்குவரத்து நெருக்கடிக்கும் இப்போதுள்ள வீதியின் அகலம் போதுமானதல்ல.
அந்த வீதியை அமைச்சர் நேரடியாகப் பார்த்தால் அது பிரதான வீதியா அல்லது ஒழுங்கை ஒன்றா என்ற சந்தேகம் அமைச்சருக்கே ஏற்படும்.
இந்த வீதி இரண்டு பக்கங்களும் பதினைத்து அடியாக அகலமாக்கத் தேவையான வரைபு உட்பட அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.
எனினும் இந்த வீதியை அகலமாக்கும் போது உடைக்கப்படவுள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கான நஷ்டஈடுகளை வழங்குவதுக்கு இதுவரை அமைச்சால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
ஆகவே இந்த வருட நிதியிலாவது இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திருகோணமலை மாவட்டத்தின் பிரதான வீதிகள் பல இன்னும் கிரவல் மற்றும் மணல் வீதிகளாகவே காணப்படுகின்றன.
இந்த வீதிகள் பிரதேச சபை, நகரசபை மற்றும் வீதி அபிவிருத்தி சபையின் கட்டுப்பாட்டில் காணப்படுவதே இதற்கான காரணங்களாகும்.
இந்த வீதிகளைப் புனர்நிர்மாணம் செய்ய உள்ளூராட்சி மன்றம் மற்றும் வீதி அபிவிருத்தி சபையில் போதியளவில் நிதியில்லை.
எனவே உள்ளூராட்சி மன்றம் மற்றும் வீதி அபிவிருத்தி சபையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான வீதிகளை இனம்கண்டு அவை வீதி அபிவிருத்தி அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உடனடியாக அவை புனரமைப்பு செய்யப்பட வேண்டும்.
அவ்வாறான சில வீதிகளை இங்கு குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.
கிண்ணியா ஆலங்கேணி நெடுந்தீவு பிரதான வீதி, பாலத்தோப்பூர் தொடக்கம் சேருவில வரையிலான வீதி,நாமல்வத்த தொடக்கம் மொரவவ வரையிலான வீதி, முள்ளிப்பொத்தானை தொடக்கம் சூரங்கள் வரையிலான வீதி என்பன குறிப்பிட்டுக் கூறலாம்.
இந்த வீதிகளை காபட் வீதிகளாக நிர்மாணிக்கத் தேவையான நிதியை அமைச்சர் ஒதுக்கித் தரவேண்டும். அத்துடன் பின்வரும் பாலங்களை நிர்மாணிக்கத் தேவையான நிதியை அமைச்சர் ஒதுக்கிதர வேண்டும்.
மாஞ்சோலை பாலம், கட்டையாரு பாலம், வடசலாறு பாலம், வேதத்தீவு பாலம், முறிஞ்சன் ஆறு பாலம், என்பன அமைக்கப்படாவிட்டால் இன்னும் சில வருடங்களில் முழு கிண்ணியா பிரதேசமும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.
ஒரு பகுதிக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ள குறிஞ்சாக்கேனி பாலத்துக்கான முழுமையான நிதி ஒதுக்கப்படல் வேண்டும்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளை கட்டுப்படுத்த போக்குவரத்து விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.