யாழ் கிளிநொச்சி மக்களின் மின்சார பிரச்சினை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி!

Report Print Samaran Samaran in அபிவிருத்தி

மின் கட்டணம், மின் இணைப்பு இடைநிறுத்தம், இன்னும் மின்சாரம் வழங்கப்படாத கிராமங்கள், மின்சாரக் கட்டணப் பட்டியல் உரிய காலத்தில் வழங்கப்படாதமை அதனால் அதிகரித்த மின்சாரக் கட்டண நிலுவைப் பணம் போன்ற மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை மின்சார சபையினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று முந்தினம் மாலை 2.00 மணியளவில் கிளிநொச்சி இலங்கை மின்சாரசபையின் மின் வழங்கல் பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது மின்சாரக் கட்டணம் தொடர்பான மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மின் இணைப்பு வழங்கப்படாத இடங்களுக்கு மக்களின் நன்மை கருதி மின் இணைப்புக்களை விரைந்து வழங்கி வீடுகளுக்கு மின்னிணைப்பை வழங்குவதற்கான உடனடி நடவடிக்கை, நகர மின் விளக்குகளைச் சீராக ஒளிர வைத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய காரியாலயத்தில் இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் குணதிலக தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களுடனான மேற்படி கலந்துரையாடலில் கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், உப தவிசாளர் தவபாலன், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் மு.சிவமோகன், கரைச்சிப் பிரதேச சபையின் செயலாளர் க.கம்சநாதன், யாழ்ப்பாண மாவட்ட மின் அத்தியட்சகர் ஆதிரன், கிளிநொச்சி மாவட்ட மின் அத்தியட்சகர் குகராஜ், கிளிநொச்சி மாவட்ட மின் பொறியியலாளர் பர்சாட் ஆகியோர் கலந்துகொண்டு மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் அவற்றுக்கான விரைந்து தீர்வு காணல் தொடர்பில் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் மின்சாரப் பாவனைக் கட்டணப் பட்டியல் குறித்த காலத்திற்குள் மக்களுக்குக் கிடைப்பெறாதமையால் மின்சாரப் பாவனைக் கட்டணம் அதிகமாகியுள்ளதாகவும் அதனால் மக்கள் பெருந்தொகைப் பணத்தைக் கட்ட முடியாது அவதிப்படுவதாகவும் அவர்களுக்கான மின்னிணைப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்குத் தீர்வுகாண்பதற்காண வழியைக் கைக்கொள்ளுமாறும் சுட்டிக்காட்டினார்.

அவர்கள் மின்சாரக் கட்டணங்களைக் கட்ட குறிப்பிட்ட கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இடைநிறுத்தப்பட்ட வீடுகளுக்கான மின்சார இணைப்புக்களை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும் அங்கு கூறுகையில், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பல கிராமங்களில் பலரது வீடுகளுக்கு இன்னமும் மின்னிணைப்பு வழங்கப்படவில்லை அவர்களுக்கு மின்னிணைப்பு வழங்குவது பற்றி கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்களுக்கு அதனை இலவச மின்னிணைப்பாக வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட வேண்டும் அதற்கு நாமும் எம்மாலான பணிகளை முன்னெடுப்போம். என்று கூறினார்.

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட கரைச்சிப்பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் சந்தை வர்த்தகர்களுக்கான மின் கட்டணங்களைச் சீராக்குவது பற்றியும் ஒவ்வொரு கடைகளுக்கும் தனித்தனி மின்னிணைப்புக்களை வழங்குவது பற்றியும் நகர வீதி மின் விளக்குக்கள் தொடர்பாகவும் கூறினார்.

மற்றும் இதில் கலந்துகொண்ட கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் மு.சிவமோகன், பிரதேச சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றால் வீதிகளை அகலிப்புச் செய்து புனரமைப்புச் செய்யும் போது மின்கம்பங்கள் வீதிக்கு நடுவில் நாட்டப்பட்டு இருக்கின்றமையால் வீதிப் போக்குவரத்திற்கும் புனரமைப்புக்கும் இடைஞ்சலாகவுள்ளதாகவும் அதனை இடம்மாற்றி வீதிக் கரையில் நாட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கூறினார்.

இதனை கேட்டறிந்த இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதிப் பொதுமுகாமையாளர் குணதிலக அதனைப் பிரதேச சபை தமக்கு அடையாளங்காட்டி அறிவிக்கும் போது தாம் வீதிக்கு இடையூறாகவுள்ள மின்கம்பங்களை இடம்மாற்ற உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் சந்தைக் கடை வர்த்தகர்களுக்கான மின்சாரம் வழங்குதல், கட்டணம் தொடர்பிலும் தாம் உரிய கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் முன்வைக்கப்பட்ட மக்களது மின் கட்டணம், குறித்த காலத்திற்குள் மின் கட்டண பட்டியல் விநியோகம், மின் கட்டணம் செலுத்தத் தவறியவர்களின் மின் துண்டிப்பை மீள வழங்கி அவர்கள் மின்சாரக் கட்டணம் செலுத்த குறிப்பிட்ட கால அவகாசம் வழங்குதல், மின்சாரம் வழங்கப்படாத கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கி அங்குள்ள வீடுகளுக்கு மின்னிணைப்புக்களை விரைந்து வழங்குவது, இலவச மின்னிணைப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில் இதுவரை காலமும் யாழ்ப்பாண மாவட்டப் பிராந்திய மின் வழங்கல் அலுவலகத்தின் கீழ் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்த கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்திற்கான மின் வழங்கல் சேவையானது இரண்டு வாரங்களுக்குள் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மின் வழங்கல் காரியாலயத்தினூடாக மின்சாரம் வழங்கப்படவுள்ளது எனவும் அதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Latest Offers