சட்டவிரோதமாக நாடு திரும்பும் இலங்கை அகதிகளுக்கு முக்கிய அறிவித்தல்

Report Print Shalini in புலம்பெயர்

உள்நாட்டு போர் காரணமாக இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்கள் தற்போது நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வர முயற்சித்து பணத்தை பறிகொடுப்பதுடன், நடுக்கடலில் வைத்து கைது செய்யப்படும் சம்பவங்களும் ஏராளமாக இருக்கின்றன.

அந்த வகையில் கடந்த 5ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் வந்த படகோட்டிகள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, நேற்றைய தினமும் தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமான முறையில் தாயகம் திரும்பிய கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் இருவர் என 4 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இந்தியாவிலிருந்து சொந்த நாட்டுக்குள் சட்டவிரோதமாக வந்து கைதாகும் சம்பவங்களை தடுப்பதற்கு என்ன செய்யலாம்?

இந்தியாவில் இருந்து நாடு திரும்ப விருப்பும் இலங்கை அகதிகளுக்கான வேலைத் திட்டம் என்ன என்பது குறித்து கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்திலுள்ள அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

“இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அவர்களின் சுயவிருப்பின் பெயரில் இலங்கை திரும்ப விரும்பினால் ஐ.நா. அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் ஊடாக நிகழ்ச்சித் திட்டம் ஒன்று இருக்கிறது.

சென்னையில் உள்ள ஐ.நா. அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தில் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

அகதிகள் சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்புவோருக்கு இந்த உதவிகள் கிடைக்கின்றன.

அவர்கள் நாடு திரும்புவதற்கான விமானப் பயணச் சீட்டு, மீள்ஒருங்கிணைப்பிற்கான சிறு ஊக்கத்தொகை, போக்குவரத்து வசதி என்பவற்றை அகதிகள் பெற முடியும்.

போர் முடிந்த பின்னர் இதுவரை சுயவிருப்பத்தின் பேரில் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக 7,000 பேர் வரை நாடு திரும்பியுள்ளனர்.

ஆனால் இவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வருவது முக்கியமானது” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

முறையான, பாதுகாப்பான பயண முறைகள் இருக்கும் போது, இவ்வாறு பாதுகாப்பற்ற, சட்டவிரோதமான கடற்பயணங்களை மேற்கொண்டு பணத்தை வீணடிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவது கவலைக்குரிய விடயமாகும்.

மேலும், “இந்தியாவில் உள்ள அகதிகள் நாடு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு முறையான வேலைத் திட்டமொன்று இருக்கிறது. அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசாங்கம், அமைச்சர் என்ற வகையில் நாம் செய்துகொடுக்கிறோம்” என்று மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.